திருமாவை பற்றி விஜய் அப்படி பேசிய நொடி.. ஆதவ் அர்ஜுனா ஆரவாரம்.. விடாமல் கைதட்டல்.. என்ன சொன்னார்?

post-img

சென்னை: நடிகர் விஜய் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி பேச பேச.. அதற்கு விசிட் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரித்து கைதட்டினார்.
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய சில விஷயங்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதில், ஆளும் திமுகவை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்து ஆதவ் அர்ஜுனா கடுமையாக பேசி இருந்தார். அதில், பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது!" மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது; மன்னராட்சியை கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள்;

அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்; பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது; தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவு எடுத்துவிட்டார்கள். ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் அரசியல் மூலம் ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம்; தமிழ்த் தேசியம் என்றாலும், பிரபாகரன் சொன்னது போல எல்லோரும் சமம் என்பதுதான்.
கொள்கைகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழலைச் செய்யக்கூடிய நிலை இருக்க கூடாது. "மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் சங்கி என்று சொல்வார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள். 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது, என்றெல்லாம் பேசினார்.

விஜய் பேச்சு: இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது; அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்.
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு '200 வெல்வோம்' என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு... என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. இருமாப்போடு 200 தொகுதியிலும் வெல்வோம் என்று சொல்பவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்
நான் ஏன் மழை வெள்ளத்திற்கு நேரடியாக சென்று நிவாரணம் வழங்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடறதும், அறிக்கை விடறதும், மழையில் நீரிலிருந்து போட்டோ எடுக்குறதும்... எனக்கு அதுல கொஞ்சம்கூட உடன்பாடில்ல.

மணிப்பூர் விவகாரத்தைக் கண்டே கொள்ளாமல் மத்தியில் ஆட்சியில் செய்துவருகிறார்கள். வேங்கைவயல் விஷயத்தில் இங்கிருக்கும் சமூக நீதி அரசும் ஒன்றும் செய்யவில்லையே... இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்திருந்தால் வெட்கித் தலைகுனிந்திருப்பார். ஜனநாயகத்தின் ஆணி வேரே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்தான். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் சுதந்திரமாகவும், நியாயமாகவும்தான் தேர்தல் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டும் என தோன்றுகிறது. தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்துடன் நியமிக்கப்பட வேண்டும் என்பது எனது வலிமையான வேண்டுகோள் என்று விஜய் கூறியுள்ளார்.
கைதட்டல்: இதில் திருமா பற்றி பேச பேச விஜயை பார்த்து ஆதவ் அர்ஜுனா கைதட்டினார் . அதோடு நிற்காமல்.. இருவரும் கடைசியில் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர். அவர்களின் இந்த செயல் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

Related Post