சென்னை: "நூறு கருணாநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. 2026ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். ஸ்டாலினே நமக்கு கூட்டணியை அமைத்துக் கொடுத்துவிடுவார்" என அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.
சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் பேசுகையில், "இந்த அரங்கத்தில் தான் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம். நம்மை யாரும் தோற்கடிக்க முடியாது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை நம்பி அதிமுக கிடையாது. 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கும் இயக்கம் அதிமுக.
அதிமுகவில் சலசலப்பு என சிலர் உண்மைக்கு புறம்பாக கூறி வருகின்றனர். காது இருந்தும் கேட்காத செவிடர்களே.. கண்ணிருந்தும் பார்க்காத குருடர்களே எங்கள் கூட்டத்தை பாருங்கள். எங்கே இங்கு கருத்து வேறுபாடு உள்ளது? எங்கே இங்கு சலசலப்பு?
ஒற்றுமை தான் அதிமுகவின் பலம். நூறு கருணாநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. 2026ல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் உளவியல் ரீதியாக நம்மை பலவீனப்படுத்த பார்க்கின்றன. அதிமுக யாரை நம்பியும் இல்லை. தொண்டர்களின் ஒற்றுமையே அதிமுகவின் பலம்.
அதிமுக எனும் இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக துரோகிகளால் பல இன்னல்களை சந்தித்துள்ளது. அனைத்தையும் முறியடித்தவர் எடப்பாடியார். அதிமுக எஃகு கோட்டையாக இன்று இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம். அதிமுகவை அழித்துவிடலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார்.
இலங்கையில் ராஜபக்சே குடும்பமும், வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா குடும்பமும் மக்களால் அடித்து விரட்டப்பட்டது. சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இங்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு அமைச்சரை சேற்றால் அடித்து விரட்டியுள்ளனர். புயல் மரக்காணத்தை கடக்கும் என்று சொல்லும் போது, மழையே இல்லாத சென்னையில் முதல்வர் ஸ்டாலின் படம் காட்டினார். ஆனால் எடப்பாடியார் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணம் கொடுத்தார்.
2001 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு வரை அதிமுக கூட்டணி அமையவில்லை. 10 நாட்களுக்கு முன்புதான் கூட்டணி அமைந்து அதிமுக வென்றது. 2011ஆம் ஆண்டில் தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்யும் போதுதான் கூட்டணி அமைந்தது. அதே போல் தற்போதும் கூட்டணி குறித்த கவலை வேண்டாம். கூட்டணி அமைப்பதை எடப்பாடியார் பார்த்துக் கொள்வார். நாம் அமைக்கிறோமோ இல்லையோ ஸ்டாலினே நமக்கு கூட்டணியை அமைத்துக் கொடுத்துவிடுவார்." எனப் பேசியுள்ளார்.