சென்னை: "வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்" என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் புகழாரம் செலுத்தியுள்ளார். வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கருணாநிதியுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம். வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இடதுசாரிக் கட்சி அல்ல; ஆனால் இடதுசாரிகளுடன் நெருக்கமான தோழமையைக் கொண்ட கட்சி. இந்துத்துவா கொள்கைகளை கடுமையாக எதிர்க்கக் கூடிய அதன் நேர் எதிரியான திராவிட சித்தாந்தத்தை பின்பற்றக் கூடிய கட்சியாக திமுக தம்மை வெளிப்படுத்திக் கொண்டு வந்தது. 1989-ம் ஆண்டு தேசிய அரசியலில் மாநிலக் கட்சிகள் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கின. இதில் திமுக தலைவராக இருந்த கருணாநிதியும் முதன்மை பங்கு வகித்தார்.
1989-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மாநிலக் கட்சிகள் இணைந்த தேசிய முன்னணி மத்தியில் ஆட்சி அமைத்தது, தேசிய முன்னணி ஆட்சியின் பிரதமராக விபி சிங் பதவி வகித்தார். அப்போது தேசிய முன்னணி அரசுக்கு அதிதீவிர வலதுசாரி இயக்கமான பாஜக வெளியில் இருந்து ஆதரவு தந்தது. இந்த அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றிருந்தது. இடதுசாரிகளும் இந்த தேசிய முன்னணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தன. பின்னர் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதை முன்வைத்து விபி சிங் ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக. (மண்டல் கமிஷன் பரிந்துரையானது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் வெறும் 27% இடஒதுக்கீடு மட்டும் வழங்க வகை செய்தது. இதனைத்தான் பாஜக அன்று கடுமையாக எதிர்த்தது). 1991-ம் ஆண்டு தேசிய முன்னணி ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதன் பிறகு 1991-ம் ஆண்டு தேர்தலில் வென்று 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 1996-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. அப்போது அதிகமான இடங்களைப் பெற்ற கட்சி என்ற பாஜகவை கூட்டணி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. பிரதமராக பாஜக நிறுவனத் தலைவர் வாஜ்பாய் பதவியேற்றார். ஆனால் பாஜக மதவாத கட்சி என்ற முத்திரையைக் குத்தி திமுகவை உள்ளிட்ட தேசிய முன்னணி கட்சிகள் ஆட்சி அமைக்க மறுத்தன. இதனால் வாஜ்பாய் 13 நாட்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடிய ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சி 1998-ம் ஆண்டு கவிழ்ந்தது.
1998-ம் ஆண்டு மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவானது. இந்த அணியில் தமிழ்நாட்டின் அதிமுக,மதிமுக, பாமக உள்ளிட்டவை இடம் பெற்றன. திமுக- காங்கிரஸ் தனி அணிகளாக களம் கண்டன. இத்தேர்தலில் அதிமுக கூட்டணி 30 இடங்களில் வென்று மீண்டும் வாஜ்பாய் பிரதமராக ஆதரவு தந்தது. ஆனால் 13 மாதங்களில் அதிமுகவால் வாஜ்பாய் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆட்சி கவிழும் முன்பாக வாஜ்பாய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது திமுக. இருந்த போதும் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சியைப் பறி கொடுத்தார்.
இதனால் 1999-ம் ஆண்டு நாடு மீண்டும் பொதுத்தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுகவும் இடம் பெற்றது. அப்போது, "மதவாதம் இனிமையானது என்று பொருள் அல்ல. பாம்பை விட மோசம் என்று ஒரு பெண்ணையோ ஆணையோ சொன்னால், பாம்பு நல்லது என்று அர்த்தமா? பாம்புக்கும் விஷம் உண்டு என்றுதான் அர்த்தம்" என்றார் கருணாநிதி. திமுக- பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் 26 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக கூட்டணி 303 இடங்களுடன் மீண்டும் ஆட்சியை அமைத்தது. வாஜ்பாய் அமைச்சரவையில் திமுகவின் முரசொலி மாறன், டிஆர் பாலு, ஆ.ராசா இடம் பெற்றனர். வாஜ்பாயின் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவடைய திமுக முழு ஆதரவைத் தந்தது.
இந்த காலகட்டத்தில் 2001-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலிலும் பாஜக- திமுக கூட்டணியே நீடித்தது. அப்போது பாஜகவுக்கு 21 இடங்களை தந்தது திமுக. இதில் பாஜக 4 இடங்களைக் கைப்பற்றி தமிழ்நாட்டு சட்டசபையில் நுழைந்தது. 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் பாஜகவுடனான உறவை திமுக முறித்துக் கொண்டது.
இந்த பின்னணியில்தான் தற்போது வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், புகழாரம் சூட்டியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.