சென்னை: நாட்டின் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், உடனே கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அயனாவரத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் இளம்பெண் ஒருவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி. இவருக்கு சமீபத்தில் ஸ்னாப்ஷாட் எனப்படும் சோஷியல் மீடியா மூலம் சிலர் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களுடன் தொடர்ந்து பேசி வந்த இளம்பெண்ணிடம், சில நாட்கள் கழித்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிச் சென்ற மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடத்தில் கூறவே அவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, போலீசார் குற்றவாளிகளை எச்சரிக்கை செய்து விடுவித்ததாகவும், மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், மீண்டும் வழக்குப் பதிவு செய்து, 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்? தன் பொறுப்பில் இருக்கும் தமிழக காவல்துறையை அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage