பேரிச்சம்பழம் கொட்டையிலிருந்து பெர்ப்யூம்.. அன்றே சொன்னார் விவேக்! கோலாவாக்கி சாதித்த சவுதி அரேபியா

post-img

ரியாத்: பாவனா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜெயம்கொண்டார் திரைப்படத்தில், பல்வேறு வகை தொழில்களை முயற்சி செய்து பார்க்கும் கதாப்பாத்திரத்தில் வந்த விவேக், பேரிச்சம்பழ கொட்டையிலிருந்து பெர்ப்யூம் செய்ய முதலீடு தேவை என வினய் கதாப்பாத்திரத்திடம் கேட்பார். கிட்டத்தட்ட அதே மாதிரி, சவுதி அரேபியா தற்போது பேரிச்சம்பழத்திலிருந்து இன்னொரு புதுமையை செய்துள்ளது.
உலகின் முதல் பேரிச்சம்பழ கோலாவை அறிமுகப்படுத்தி சவூதி அரேபியா உணவுலகில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. வழக்கமான கார்பனேட் செய்யப்பட்ட சோடாக்களுக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாக திகழும் இந்த புதிய பானம், 'மிலாப் கோலா' (Milaf Cola) என பெயரிடப்பட்டுள்ளது.

உயர்தர பேரிச்சம்பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மிலாப் கோலாவில் சேர்க்கப்பட்ட சர்க்கரை இல்லை. பேரிச்சம்பழத்தின் இயற்கை இனிப்புத்தன்மை மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களே இதன் சிறப்பு அம்சம். நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரிச்சம்பழம், சவூதி அரேபியாவில் மிகவும் முக்கியமான உணவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும். அதிலிருந்து பானம் தயாரிக்கும் ஐடியா இப்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்: சர்க்கரை சேர்க்கப்படாததால், வழக்கமான சோடாக்களை விட மிலாப் கோலா மிகவும் ஆரோக்கியமானது. அதிக அளவு சர்க்கரை மற்றும் குறைந்த ஊட்டச்சத்துக்கள் கொண்ட சோடாக்களுக்கு மாற்றாக, மிலாப் கோலா ஆரோக்கியத்தையும் சுவையையும் இணைத்துள்ளது.
உள்ளூர் உற்பத்தி, உலகளாவிய இலக்கு: ரியாத் பேரீட்சம்பழ திருவிழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிலாப் கோலா பெரும் வரவேற்பைப் பெற்றது. பங்கேற்பாளர்கள் இந்த புதிய பானத்தைப் பற்றி மிகவும் வரவேற்றுப் பேசினர். இதன் தயாரிப்பு நிறுவனமான துரத் அல்-மதினா, இந்த பேரிச்சம்பழ பானங்களின் வகைகளை அதிகரிப்பதோடு, பிராந்திய மற்றும் சர்வதேச சந்தைகளிலும் இவற்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

புதிய தொடக்கம்: "மிலாப் கோலா வெறும் தொடக்கம்தான். போகப்போக உலகளவில் பேரிச்சம்பழங்களை வைத்து பல திட்டங்கள் உள்ளன" என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். சவூதி அரேபியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை நவீன ஆரோக்கிய விழிப்புணர்வுடன் இணைக்கும் ஒரு முன்னோடி பானமாக மிலாப் கோலா திகழ்கிறது. பருகி பார்த்துவிட்டு கமெண்ட்டில் சொல்லுங்கள் பாஸ்.
சவுதி பேரிச்சம்பழம்: உலகில் அதிக அளவுக்கு, பேரிச்சம்பழம் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடு சவுதி அரேபியா. உலக உற்பத்தியில் 17% பங்களிக்கிறது. ஆண்டுக்கு சுமார் 1.6 மில்லியன் டன் பேரிச்சம்பழம் உற்பத்தி செய்கிறது, சராசரி நபர் ஆண்டுக்கு சுமார் 35.1 கிலோ உண்கிறார். அதிக பேரிச்சம்பழம் உற்பத்தி செய்யும் பகுதிகள் ரியாத், காசிம், மதீனா மற்றும் கிழக்கு பிராந்தியம் ஆகும்.
சவுதி அரேபியாவில் நாடு முழுவதும் 3 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான பேரிச்சம்பழ மரங்கள் உள்ளன. 1990ல் 1 கோடியே 30 லட்சமாக இருந்த மரங்களின் எண்ணிக்கை 2011ல் 2.5 கோடியாக உயர்ந்தது. அது தற்போது மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் 400க்கும் மேற்பட்ட பேரிச்சம்பழ வகைகள் உள்ளன, ஆனால் சுமார் 40 வகைகளுக்கு மட்டுமே வணிக மதிப்பு உள்ளது. சில நன்கு அறியப்பட்ட வகைகள் என்று எடுத்துக்கொண்டால், சுக்ரி, சாகீ, எக்லாஸ், அஜ்வா, பர்ஹீ, அன்பரா, சஃபாவி, ரோதனா, ரஷோடியா மற்றும் கெத்ரி ஆகியவை அடங்கும். சவுதி அரேபியா, உலகின் 113 நாடுகளுக்கு பேரிச்சம்பழங்களை ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post