ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பெண் பக்தர் பலி!

post-img
ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து மேல்மருவத்தூர் சென்றுக் கொண்டிருந்த ஆதிபராசக்தி பக்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சுவாமி தரிசனம் செய்வதை போல் மேல்மருத்தூரிலும் செவ்வாடை அணிந்து கொண்டு மாலை போட்டு மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் நடைமுறை உள்ளது. இதை மறைந்த பங்காரு அடிகளார் கொண்டு வந்திருந்தார். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மாலை அணிந்து விரதமிருக்கும் ஆண்கள், பெண்கள் தை பூசம் வரை கோயிலுக்கு சென்று அண்டத்தை காக்கும் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்துவிட்டு வருவது வழக்கம். சபரிமலையை போல் இவர்களும் இருமுடி சுமந்து வருவர். 9 ஆண்டுகளுக்கு மேல் மாலை போட்டவர்கள் மஞ்சள் ஆடையையும் அதற்கு கீழ் மாலை போடுபவர்கள் செவ்வாடையையும் அணிந்துக் கொண்டு வர வேண்டும். மருவத்தூர் அம்மனை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் உள்ளூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகத்துடன் மாலை போட்டுக் கொண்டு பேட்ச் பேட்ச்சாக செல்வது உண்டு. அந்த வகையில் வாணியம்பாடியில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றனர். அப்போது வழியில் ஆற்காடு அருகே முப்பதுவெட்டி பகுதியில் டீ குடிப்பதற்காக தனியார் பேருந்தை நிறுத்தினர். அப்போது அங்கு தாழ்வாக தொங்கிய மின்கம்பி பேருந்து மீது உரசியது. இதில் இரும்பு கம்பியில் கை வைத்து இறங்க முயன்ற அகல்யா என்ற 20 வயது பெண் மின்சாரம் பாய்ந்து பலியானார். இதனால் அந்த பகுதியில் சோகம் நிலவியது. அவரை சக பக்தர்களும் உறவினர்களும் எழுப்ப முயன்ற காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

Related Post