டெல்லி: அதானி விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அமெரிக்கா செயல்பட்டு வருவதாக பாஜக பரபரப்பான குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதனை முற்றிலுமாக மறுத்துள்ள அமெரிக்கா, பாஜகவின் இந்த கருத்து ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் அதானி. நம் நாட்டின் 2வது பெரிய பணக்காரராக உள்ளார். இவர் துறைமுகம், எரிசக்தி, நிலக்கரி உள்பட பல்வேறு துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். சமீபகாலகமாக அதானி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
தற்போது அதானி மற்றும் அவரது நிறுவனம் மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டள்ளது.
அதாவது நம்நாட்டில் சூரிய ஒளி (சோலார்) மின்சார ஒப்பந்தம் பெற அதானி நிறுவனம் ரூ.2,200 கோடியை பல்வேறு வகைகளில் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதனை மறைத்து அமெரிக்காவில் இருந்து முதலீடுகளையும் அதானி பெற்றுள்ளதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஆளும் பாஜக அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் லோக்சபா, ராஜ்யசபா முடங்கி வருகின்றன.
இதற்கிடையே தான் கடந்த 5ம் தேதி அமெரிக்கா மீது பாஜக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுதொடர்பாக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்தியாவின் இமேஜை டேமேஜ் செய்வதற்காகவும், பிரதமர் மோடிக்கு மற்றும் முன்னணி தொழிலதிபர் அதானியை குறிவைத்து அமெரிக்கா OCCRP மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதானி குழுமத்தை தாக்குவதற்கும், அது அரசாங்கத்துடன் நெருக்கம் உள்ளதாக குற்றம் சாட்டுவதற்கும் ராகுல் காந்தியின் அறிக்கையை OCCRP பயன்படுத்தி உள்ளது.
இதில் ஓசிசிஆர்பி என்பது 50 சதவீத நிதி என்பது நேரடியாக அமெரிக்கா வெளியுறவுத்துறையில் இருந்து தான் செல்கிறது. ஓசிசிஆர்பி என்பது மீடியா என்ற போர்வையில் டீப் ஸ்டேட் அஜென்டாவை கையில் எடுக்கிறது'' என குற்றம்சாட்டி உள்ளது. ஓசிசிஆர்பி என்பது ஒரு ஊடக பிளாட்பார்ம் ஆகும். இதன் தலைமையிடம் என்பது நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமில் (Amsterdam) உள்ளது. அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்தியா குறித்து சில விஷயங்களை எழுதியது சர்ச்சையானது.
இந்த ஊடக பிளாட்பார்ம் என்பது பொதுமாக க்ரைம் மற்றும் ஊழல் சார்ந்த செய்திகளில் அதிக கவனம் செலுத்தி வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா நிதி உதவி செய்து வருவதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை குறிப்பிட்டு தான் பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛இந்தியாவை ஆளும் கட்சியில் இருந்து வெளிவந்துள்ள இத்தகைய குற்றச்சாட்டு எங்களை ஏமாற்றமடைய செய்கிறது. பத்திரிகையாளர்களுக்கான தொழில்முறை மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சியை ஆதரிக்கும் வகையில் அமெரிக்க அரசு சுதந்திரமான சில நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறது. இந்த செயல்பாடு என்பது குறிப்பிட்ட பத்திரிகையின் எடிட்டோரியல் சார்ந்த முடிவுகள் மற்றும் அதன் அமைப்பு சார்ந்த முடிவுகளில் தலையிடும் படியாக இருக்காது.
அமெரிக்கா நீண்ட காலமாக உலகெங்கிலும் உள்ள ஊடக சுதந்திரத்தின் சாம்பியனாக இருந்து வருகிறது. பத்திரிகை சுதந்திரம் மற்றும் சுதந்திரமான செயல்பாடு என்பது எந்த ஜனநாயகத்திலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு வழிவகுக்கும். அதேபோல் அதிகாரத்தில் உள்ளவர்களை பதிலளிக்க வைக்கும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage