என்னது ‘நெஞ்சில் குடியிருக்குமா’? வாடகை வீடா? : விஜய்யை கிண்டலடித்த லியோனி!

post-img

நெல்லை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அவரது உரையை தொடங்குவதற்கு முன்னால் 'நெஞ்சில் குடியிருக்கும்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பற்றி புதிய விளக்கத்தை திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று விஜய் பேசிய சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் தங்களின் அரசியல் எதிரி திமுகதான் எனப் பகிரங்கமாக அறிவித்தார். அதன்பின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை திருமாவளவன் தவிர்த்தார்.

அரசியல் விமர்சகர்கள் சிலர் திருமாவளவன் இதில் கலந்து கொண்டிருக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து விவாதித்து வந்தனர். அதையே தனது உரையின் போது விஜய், 'அவர் விழாவில் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர் வரவில்லை என்றாலும் அவரது மனம் நம்முடன் தான் இருக்கும். அவரை விழாவில் பங்கேற்க விடாமல் எந்தளவுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. 200 இடங்களைப் பிடிப்போம் என்று இறுமாப்புடன் உள்ளவர்களின் கூட்டணி கணக்குள் 2026 உடையும்' என்று பேசி இருந்தார்.
அதற்குப் பதிலளித்த திருமாவளவன், 'யாரும் அழுத்தம் தரும் அளவுக்கு நாங்கள் பலகீனமாக இல்லை' என்று தெரிவித்திருந்தார். இந்தப் புத்தக விழாவில் பேசும்போது விஜய், 'என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள், தோழா, தோழிகள்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த 'நெஞ்சில் குடியிருக்கும்' என வசனத்தை விஜய் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார். அதை இப்போது திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கிண்டலடித்து நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
லியோனி பேசுகையில், "மேடையில் மேயருக்கு நாற்காலி போட்டிருக்கிறோம். ஆனால், அவர் மக்களோடு மக்களாக உட்கார்ந்து என் உரையைக் கேட்கிறேன் என்று கீழே போய் அமர்ந்திருக்கிறார். ஆனால், நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்தவர் ஒரு வருடத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போகிறேன் என்கிறார்" என்றவர் விஜய்யின் 'நெஞ்சில் குடியிருக்கும்' என்ற வச்சத்தைக் கிண்டலடித்தார்.

"நெஞ்சில் குடியிருக்கும் என்பதற்கு என்ன அர்த்தம்? குடியிருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலி செய்துகொண்டு சென்றுவிடுவான். அதற்காகத்தான் மு.கருணாநிதி, 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே' என்று சொன்னார். குடியிருப்பவன் வாடகைக்குக் குடியிருப்பான். லீசுக்கு கூட குடியிருப்பான். சில நேரம் ஓசியில் கூட குடியிருப்பான். சில நேர, வாடகை கொடுக்காமலே ஓடிவிடுவான். இதை ஏன் சொல்கிறேன் என்றால், விஜய் தொடங்கிய வார்த்தையே தவறு.
கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகவில்லை. அதற்குள் முதலமைச்சரா? அந்தக் கனவில் மிதப்பவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன். ரோம் பேரரசின் அரண்மனை ஒரே நாளில் கட்டியதல்ல. அதைப்போலப் பல ஆண்டு காலம் பல போராட்டங்களை எதிர்கொண்டு கட்டப்பட்ட இயக்கம்தான் திமுக. கல்லூரி முடித்து வந்த உடனேயே உதயநிதியை துணை முதல்வராக்கவில்லை. அவர் பல போராட்டங்களைச் செய்துள்ளார். நீட் தேர்வு ரத்துக்காக 5 முறை தெருவிலே இறங்கிப் போராடியவர் அவர். 2019இல் 234 தொகுதிகளுக்கும் சென்று கட்சியின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்தவர். அவர் படிப்படியாகவே பதவிகளைப் பெற்று இந்த நிலையை அடைந்துள்ளார். வந்தவுடன் பதவி தரவில்லை" என்று பேசி இருக்கிறார்.
மேலும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அப்படியே பின்பற்றி 11 மாநிலங்களில் அது செயல்வடிவம் பெற்றுள்ளது என்றும் இந்தியா முழுமைக்கும் 12 கோடி பெண்கள் இன்றைக்கு உரிமைத் தொகை பெறுகிறார்கள் என்றால் அதற்கு முதல் விதையைப் போட்டது திமுக அரசுதான் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

"குடும்ப அட்டையில் உள்ள குடும்பத் தலைவரிடம் பணத்தைக் கொடுக்காமல் பெண்களிடம் கொடுத்தால்தான் குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்பதை உணர்ந்து அளித்துள்ளது திமுக அரசு. சுமார் 1கோடி 28லட்சம் மகளில் இதனால் பலனடைகிறார்கள். அதேபோலத்தான் விடியல் பயணம். பெண்கள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பயணிக்கிறார்கள். இது யாரால்? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த திட்டத்தால்தான்" என்று பேசி இருக்கிறார்.

Related Post