சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என குற்றம்சாட்டி அரியலூர் மாவட்டத்தில் தவெக மகளிர் அணியினர் கூண்டோடு விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் கட்சிக் கொடியை இறக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், கடந்த அக்டோபரில் விக்கிரவாண்டியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைளையும், கோட்பாடுகளையும், செயல் திட்டங்களையும் அறிவித்தார்.
திமுக, பாஜகவை தமது அரசியல் மற்றும் சித்தாந்த எதிரிகள் என்று குறிப்பிட்டுள்ள விஜய் அந்த இரு கட்சியினர் தவிர மற்ற கட்சியினர் யாரையும் விமர்ச்சிக்காமல் சட்டசபை தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வருகிறார். மேலும் கட்சியை வலிமைப்படுத்தும் நோக்கில் நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர்கள் சேர்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார், தலைமை நிர்வாகிகளையும் அதற்கான பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.
அதேசமயம், கட்சியின் கீழ்மட்ட அளவில் உட்கட்சி மோதல்கள் நடந்து வருகின்றன. நீண்ட காலமாக விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்தவர்கள் விஜய் கட்சியைத் தொடங்கியவுடன் இணைந்தனர். இந்த சூழலில் சிலர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு தங்கள் தனிப்பட்ட செல்வாக்கை வைத்து கட்சியில் இணைந்துள்ளனர்.
ஆரம்பம் முதலே விஜய்யின் ரசிகர்களாக இருந்தவர்களை காட்டிலும், கட்சி தொடங்கிய பிறகு தவெக-வில் இணைந்தவர்களுக்கு சில இடங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கட்சி தொடங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் பல மாவட்டங்களில் உட்கட்சி மோதல் தலை தூக்கியுள்ளது. அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் விஜய் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்தே விலகியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியம் கார்குடியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி ஜெயபால். இவர் தமிழக வெற்றிம் கழகத்தில் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக பணியாற்றி வந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவர், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வந்த நிலையில், விஜய் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார்.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டிற்கு தமது பகுதியில் இருந்து மகளிர் அணி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். கார்குடியில் தனது பகுதியில் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வையும் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார் பிரியதர்ஷினி.
இந்நிலையில், கொடியேற்றும் நிகழ்ச்சியில் தவெக மாவட்ட நிர்வாகிகள் பிரியதர்ஷினி உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதற்கு நியாயம் கேட்ட பிரியதர்ஷனி ஜெயபால் உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகளை மதிக்காமல் விஜய் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஏற்றப்பட்ட விஜய் கட்சியின் கொடியினை இறக்கினர். பின்னர் கட்சி துண்டு, காரில் கட்டிய கொடி ஆகியவற்றை அகற்றியதோடு, பேட்ச் அட்டைகளையும் அகற்றினர். அப்போது அங்கு வந்த தவெக கட்சி நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் ஏற்றிய கொடியை எப்படி நீங்கள் இறக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாங்கள் சொந்த செலவில்தான் கொடிக்கம்பம் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். ரொம்ப கஷ்டப்பட்டு கட்சி பணிகளை செய்து வருகிறேன். கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு என்று தலைவர் விஜய் கூறியதால்தான் கட்சியில் சேர்ந்தோம். ஆனால் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்பதால் கட்சியில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம், எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்க்கு பெண் ரசிகைகள் அதிகம் உள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் மகளிர் நிர்வாகிகள் கூண்டோடு விலகிய சம்பவம் அரியலூர் மாவட்ட தெவக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.