டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றி வரும் நிலையில் ஈரான், ரஷ்யா ஆதரவு இருந்தும் உயிருக்கு பயந்து சிரியா அதிபர் பஷர் அல் அசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.
சிரியாவில் தற்போது மீண்டும் 8 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு போர் தீவிரமாகி உள்ளது. அந்த நாட்டின் அதிபராக உள்ள பஷர் அல் அசாத்துக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் போரை தொடங்கி உள்ளன.
இவர்கள் அலெப்போ, ஹமா உள்ளிட்ட நகரை கைப்பற்றி உள்ளன. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வரும் சூழலில் பல இடங்களில் ராணுவத்தினர், கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிளர்ச்சியாளர்கள் வேகமாக தலைநகர் டமாஸ்கஸை நோக்கி முன்னேறி வருவதாகவும் இன்னும் சில நாட்களில் டமாஸ்கஸை கைப்பற்றி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த சிரியா போரில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் களமிறங்கி உள்ளன. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷ்யா போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானும் தனது ஆதரவு படைகளை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதையும் மீறி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றன.
இதற்கிடையே தான் போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சியாளர்களின் தலைவரும்,கமாண்டருமான ஹசன்அப்டெல் கானி கறுகையில், ‛‛எங்களின் படைகள் இறுதிக்கட்ட போரில் உள்ளன. தலைநகர் டமாஸ்கஸை எங்களின் படைகள் சுற்றி வளைக்கும் பணியை தொடங்கி உள்ளன'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தான் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸை நெருங்கி வரும் சூழல் அதிபர் அசார் அல் அசாத் உயிருக்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் பரவின. அதுமட்டுமின்றி அதிபர் வெளிநாடு சென்றதால் சிரியா முழுவதுமாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வரும். ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்வது போல் சிரியாவிலும் கிளர்ச்சியாளர்களின் ஆட்சி அமையும் என்ற தகவல்கள் பரவின. மேலும் நாட்டை விட்டு பல லட்சம் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவார்கள் என்றும் பரபரப்பான தகவல்கள் கசிந்தன.
இதற்கிடையே தான் இந்த தகவலை சிரியா நாட்டு ஊடகங்கள் முற்றிலுமாக மறுத்துள்ளது. சிரியா அதிபர் அசார் அல் அசாத் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. அவர் தலைநகர் டமாஸ்கஸ்ஸில் தான் இருக்கிறார். முழுவீச்சில் தனது பணியை அவர் மேற்கொண்டு வருகிறார் என்று செய்திகள் வெளியிட்டுள்ளன. இதன்மூலம் சிரியா அதிபர் பஷர் அல் அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவலில் உண்மையில்லை என்பது உறுதியாகி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage