அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்?

post-img

சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் 1996 மற்றும் 2001 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அந்த காலக்கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்ந்ததாக அவர் மீதும், அவரது மனைவி, நண்பர் ஆகியோர் மீதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தார்கள்.


இந்த வழக்கை முதலில் விழுப்பும் நீதிமன்றம் விசாரித்து வந்தது.பின்னர் வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்தது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் , வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.


வேலூர் கோர்ட்டு பிறப்பித்த இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இது தொடர்பாகபிறப்பித்துள்ள உத்தரவில், '' அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியதில் மிகப்பெரிய தவறு இருக்கிறது. ஜூன் 23-ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4 நாட்கள் கழித்து ஜூன் 28-ம் தேதி 226 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வெளிவந்த அடுத்த 2 நாட்களில் அந்த நீதிபதி ஓய்வு பெற்று விட்டார்.


நான் எம்பி எம்எ்ல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்பதால் கீழமை நீதிமன்ற ஆவணங்களை பரிசீலித்தேன். 1996-2001 வரையிலும் பொன்முடி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், எம்எல்ஏ-வாகவும் பதவி வகித்துள்ளார். அப்போது அவரது மனைவி மற்றும் மகன்கள் பெயரில் ஏராளமான சொத்துக்களை குவித்துள்ளதாக கடந்த 2002-ம் ஆண்டு சொத்து குவி்ப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் அவரது நண்பர்கள் மணிவண்ணன், நந்தகோபால் ஆகியோர் மீது வழக்குப்திவு செய்து விசாரித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். 228 சாட்சிகள், 318 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் கடந்த 2006-ம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு 2015-ல் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு புனையும்போது சரஸ்வதி மற்றும் நந்தகோபால் இறந்து விட்டதால் மற்ற 3 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி 2022 ஏப்.26 அன்று உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மே மாத விடுமுறையில் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளார்.


அதையேற்க மறுத்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை வேலூர் அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த 23.01.2023 அன்று அரசு தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 10.04.23 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்வி கேட்டு குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளிடமும் 6.6.2023 அதிவேக விசாரணை நடத்தியுள்ளனர். ஜூன் 23 முதல் ஜூன் 28 வரையிலான இடைப்பட்ட நாட்களி்ல் 172 சாட்சிகள், 381 ஆவணங்களை பரிசீலித்து 226 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதன்பிறகு அந்த நீதிபதி 2 நாட்களில் மகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்று சென்றுவிட்டார்.


இந்த வழக்கின் குற்ற நீதி பரிபாலனத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 7.6.22 அன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது சட்டவிரோதமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவேதான் இதுதொடர்பாக தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன்.


இதில் ஏராளமான சட்டப்பூர்வ கேள்விகள் உள்ளது. உயர் நீதிமன்றம் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிபதி விசாரிக்க முடியாது எனக்கூற முடியுமா?. விடுமுறை நாட்களில் விசாரி்க்க அனுமதி கோரியதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அவரை விசாரி்க்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்கை விடுமுறை நாட்களில் விசாரிக்க ஏன் அனுமதிக்கவில்லை. மாவட்ட நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது எனக் கூறியிருப்பது இதுவே முதல்முறை. 2 நீதிபதிகள் அடங்கிய நிர்வாக கமிட்டிக்கு, ஒரு மாவட்ட வழக்கை, மற்றொரு மாவட்டத்து்க்கு மாற்ற அதிகாரம் உள்ளதா?.


குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 407 ன்படியே ஒரு வழக்கை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமேயன்றி, நிர்வாக உத்தரவின் அடிப்படையில் மாற்ற முடியாது. நிர்வாக நீதிபதிகள் அரசியல் சாசன பிரிவு 227-ஐ பயன்படுத்தி இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளனர். அந்த அதிகாரத்தை முழு அமர்வு மட்டுமே பயன்படுத்த முடியும். வேலூர் மாவட்டத்துக்கு இந்த வழக்கை மாற்றியதற்கு எந்தவொரு காரணமும் தெரிவிக்கவில்லை. அதற்கு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.


நிர்வாக நீதிபதிகளின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தது சட்டவிரோதமா?. நீதி பரிபாலனத்தில் நிர்வாக ரீதியாக முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரமும் தலைமை நீதிபதிக்கே உள்ளது. குற்றவியல் வழக்கை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கே அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க அனைத்து அதிகாரமும் எனக்கு உள்ளது. ஒரு மன்னர் தனது அதிகாரத்தை தானே தவறாக பயன்படுத்தினார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்து விடக்கூடாது. எனவே இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் பதிலளி்க்க வேண்டும். இந்த உத்தரவை தலைமை நீதிபதிக்கு தகவலுக்காக தெரிவிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறேன், என அதில் குறிப்பிட்டார். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டார்.


இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 19-ந்தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறியிருந்தார். அதன்படி இன்று பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

 

Related Post