சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் முதல் இன்றைய இறைத்தூதர் விமர்சனம் வரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியர்களை விமர்சிக்கக் கூடிய பாஜகவின் மென்மை முகமாக சீமான் உருவெடுத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
திராவிடர் இயக்க அரசியல் மேடைகளில் பேசி வந்த சீமான், 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் தமது கருத்தியல் நிலையை மாற்றிக் கொண்டார். தற்போது திராவிடம், திமுக மட்டுமே தமக்கு எதிரிகள் என பிரகடனம் செய்து பேசிவருகிறார்.
அதேநேரத்தில் பாஜக பேசுகிற இந்துத்துவ சித்தாந்த குரலையும் இஸ்லாமியர் எதிர்ப்பு குரலையும் 'மென்மையான' டோனில் தொடர்ந்து முன்வைத்து வருகிறார் சீமான் என்பது சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் விமர்சனங்கள்.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டு கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டபோதே இஸ்லாமியர்கள்- கிறிஸ்தவர்கள் குறித்த பார்வை மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தில், ' முகமதியமும் (இஸ்லாம்- முஸ்லிம்கள்) கிறித்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரகாலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப் பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும் பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும் கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்ற உணர்வுக்கு வருவாராயின் நட்பு முரண் வகையிலும் அல்வழிப் பகை முரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் "எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும்" கையாளப்பட வேண்டிய தரப்பினர் என இடம் பெற்றிருந்தது.
இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அன்னியர்கள்; அன்னிய மதத்தினர் என்ற இந்துத்துவா குரலையே மென்மைத் தன்மையில் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆவணம் வெளிப்படுத்தியிருந்தது. ஏனெனில் இஸ்லாமியர்கள்- கிறிஸ்தவர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள்; ஜாதிய ஒடுக்குமுறைகளால் மதம் மாறியவர்கள் என்கிற கோட்பாட்டைக் கொண்டவை திராவிடமும் தமிழ்த் தேசியமும். இதற்கு நேர் எதிராக தமிழ்த் தேசியத்தின் பெயரால் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுமுகமாக சீமான் கட்சியின் கொள்கை ஆவணம் இடம் பெற்றதால் விமர்சிக்கப்பட்டது.
இதன் உச்சமாக, இந்துத்துவாவின் அதே குரலான, தாய் மதம் திரும்புங்கள் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து பேசியவரும் சீமான்தான். "இஸ்லாம் அரேபிய மதம், கிருத்துவம் ஐரோப்பிய மதம், தமிழர்களின் மதம் சைவம், மாலியம், நீங்க மரச்செக்கு எண்ணைக்கு திரும்புவது போல நீங்க தாய் மதம் திரும்பி வாங்க" என 'தாய் மதத்துக்கு' திரும்புங்கள் என்கிற இந்துத்துவா இயக்கங்களின் குரலை வெளிப்படுத்தியவரும் சீமான்தான். அதனால்தான், ஒரு காலத்தில் கடவுளையே ஏற்காத சீமான் முருகனை ஏற்றுக் கொண்டார்;சிவபெருமானை ராவணனை ஏற்றுக் கொண்டார்; மாயோன் கிருஷ்ணனை ஏற்றுக் கொண்டார்.. இப்படியே படிப்படியாக தாம் ஒரு இந்து என்பதையும் ஏற்றுக் கொள்வார் சீமான் என பேசியிருந்தார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்.
இதேபோல மணிப்பூர் வன்முறைகள் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை. இங்க இருக்க கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை. நாம நினைச்சுக்கிட்டிருக்கோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தேவனின் குழந்தைகள்னு. ஆனா, அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது என இன்னமும் கடுமையாக பேசினார் சீமான். அத்துடன் இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் 18% வாக்குகளை தி.மு.க.வுக்குப் போட்டு, காங்கிரசுக்குப் போட்டு நாட்டை தெருவில் போட்டது இவர்கள்தான். சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீரழிவான நிர்வாகம் ஆகியவற்றுக்குக் காரணம் இவர்கள்தான். இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொடுப்பது. பாவத்தையே பெரும்பான்மையாக அவர்கள்தானே செய்கிறார்கள்? என்றும் பேசியதும் சீமான்தான்.
இதுவும் சர்ச்சையாக வெடித்த போது, தமக்கு இருக்கும் தமிழ்த் தேசிய முகத்தின் மூலம், ". இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.க. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள், நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன்.
நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்" என மழுப்பலான பதிலைத் தந்தவரும் சீமான்தான்.
இதன் தொடர்ச்சியாகவும் அதீத உச்சமாகவும் இஸ்லாமியர்களின் இறை தூதர் குறித்த விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் சீமான். கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி அல் உம்மா பாட்ஷாவின் இறுதி நிகழ்வில் சீமான் பங்கேற்றதை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதில் தந்த சீமான், நானும் திருமாவளவன் அண்ணனும் இஸ்லாமிய மக்கள் வாக்குகளைப் பொறுக்கச் சென்றோம் என்று அண்ணாமலை கூறுகிறார்; அவர் யார் வாக்குகளைப் பொறுக்கப் பேரணி நடத்தினார்; இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்தது இல்லை; இனிமேலும் வாக்களிப்பார்களா? என்பது அவர்களுக்குதான் தெரியும். அவர்கள் நமது கடமை திமுகவுக்கு வாக்களிப்பது என்று முடிவில் இருக்கும் போது, இறைத் தூதரோ வந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினாலும் நீங்கள் இறைத் தூதரே இல்லை என்று என் மக்கள் சொல்வார்கள் என பேசியிருந்தார்.
புனித குர்ஆன் போதனைகளும், அதை போதித்த நபிகள் நாயகம் போதனைகளுமே இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால் சீமான் என்னவென்றால் நபிகள் நாயகம் சொன்னாலும் முஸ்லீம்கள் கேட்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளது அம்மத்தின் அடிப்படையிலேயே கை வைப்பதற்கு சமமாக பார்க்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் பற்றிய விமர்சித்ததன் அதி உச்சமாக, இறைத்தூதர் குறித்த இப்போது சீமான் விமர்சிக்கவும் தொடங்கியிருக்கிறார்; இத்தனை ஆண்டுகளாக சீமானின் விமர்சனத்தை எளிதாக இஸ்லாமியர்கள் கடந்து சென்ற நிலையில் இப்போதுதான் தங்களது எதிர்ப்பையும் எதிர்வினையையும் காட்டமாக முன்வைக்கவும் தொடங்கி இருக்கின்றனர். இதுவரை தமிழ்த் தேசியத்தின் போர்வையில் இந்துத்துவா குரலை அவ்வப்போது வெளிப்படுத்திய சீமான், இப்போது அம்பலப்பட்டு உண்மை முகத்துடன் நிற்கிறார்.. இந்துத்துவா குரலின் மென்மை முகமாக சீமான் வெளிப்பட்டு நிற்பது அப்பட்டமாகிவிட்டது என்பதுதான் உண்மையும் கூட!