வாயை திறக்காமல் இருந்திருக்கலாம் அல்லு அர்ஜுன்.. வசமாக சிக்கினார்.. பவன் கல்யாண் தலையிடுவாரா?

post-img
ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்பட ஷோவின்போது, சந்தியா தியேட்டரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு சினிமா உலகையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் மகன் அடிபட்டு கோமா நிலையில் உள்ளார். இந்த சம்பவத்திற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையிலிருந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ரேவந்த் ரெட்டி நேற்று அளித்த பேட்டியில், காவல்துறை கூட்டம் அதிகமாகும் என்பதால் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வர வேண்டாம் என எச்சரித்திருந்தும், அவர் தனது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி, கூட்டத்தை அதிகரிக்கச் செய்தார். கார் ரூஃப் கதவைத் திறந்து ரோட் ஷோ செய்தது கூட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. இது பொறுப்பற்ற செயல். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் அவர் வெளியேற மறுத்து, படம் முடிந்த பிறகு செல்வதாக கூறியது மிகவும் தவறானது. அவரைப் பாதுகாக்க வந்த பவுன்ஸர்கள் கூட்டத்தை தள்ளியது கூட்ட நெரிசலை மேலும் அதிகரிக்கச் செய்தது. உயிரிழந்தவரின் குடும்பத்தினரையோ அல்லது காயமடைந்தவரையோ நேரில் சென்று பார்க்காதது மனிதநேயமற்ற செயல் என்று வரிசையாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு போலீசார் கையில் வீடியோ ஆதாரங்களும் உள்ளன. இந்த சம்பவத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். ஆனால், அவர் பேசிய விதம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது. அவர் கூறியதற்கும் வீடியோ ஆதாரத்திற்கும் வேறுபாடு இருந்தது. இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அவர் அமைதியாக இருந்திருந்தால் சிறந்தது என்று கருத்து தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, அல்லு அர்ஜுன் வீட்டின் மீது ஓயூ மாணவர்கள் நேற்று கல்வீச்சு, தக்காளி வீச்சு நடத்தினர்.இந்த வழக்கில், அல்லு அர்ஜுன் வசமாக சிக்கியுள்ளார். போலீசார் 10,000 வீடியோக்களை ஆய்வு செய்து, சிலவற்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் அவரது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், அல்லு அர்ஜுன் எவ்வாறு இந்த பிரச்சனையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பலரும் ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் இவரை காப்பாற்றுவாரா என்று எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், அல்லு அர்ஜுனின் அப்பாவின் சகோதரி கணவர்தான் சிரஞ்சீவி. அந்த சிரஞ்சீவியின் தம்பிதான் பவன் கல்யாண். மாமா உறவு முறை கொண்டவர். எனவே உறவுக்காக ரேவந்த் ரெட்டியிடம் பேசி பவன் கல்யாண் இதை நீர்த்துப்போக வைப்பாரா என்று பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறுகிறார்கள். ஆனால், பவன் கல்யாண் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதால், இதுபோன்ற ஒரு வழக்கில் தலையிடுவது அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் சிரஞ்சீவி குடும்பத்திற்கும் அல்லு குடும்பத்திற்கும் இந்த பிரச்சினை வெடிக்கும் முன்பு பெரிய நெருக்கம் இல்லையாம். எனவே பவன் விலகியே இருப்பார் என்கிறார்கள்.

Related Post