துரித உணவுகள் சாப்பிடும் பழக்கத்தால் இளைய தலைமுறையினரின் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தலைமுறையினரை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர்களை பாரம்பரிய உணவு பக்கம் கொண்டு வரும் விதமாக புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது.
இந்த உணவுத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு அதன் மருத்துவக் குணங்கள், ஊட்டச்சத்துகள் அடங்கிய தகவல்களுடன் பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது. கண்காட்சியில் பால் சோறு, படுகர் இன மக்களின் கேழ்வரகு உணவு வகைகள், கேரளா, பாரம்பரிய உணவுகள் உளுந்து புட்டு, ராகி புட்டு, சிறுதானிய உப்புமா, மீன் கறி, பச்சைப்பயிறு, கேரட் ஜூஸ், ராகி அடை, கம்பு லட்டு போன்றவை இடம்பெற்றன.
இந்த உணவுகளின் தரம், பாரம்பரியம், ஊட்டச்சத்து ஆகிய விவரங்களுடன் கண்காட்சி இருந்தது. சிறப்பாக உணவு தயாரித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.