" எகிப்து செல்லும் பிரதமர் மோடி! பின்னால் இருக்கும் "சர்வதேச மேட்டர்.."ஏன் முக்கியம்

post-img

பிரதமர் நரேந்திர மோடி இப்போது அமெரிக்காவில் இருந்து எகிப்து சென்றுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையே மட்டுமின்றி சர்வதேச அளவில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அடுத்து இப்போது இரண்டு நாள் பயணமாக நேரடியாக அங்கிருந்து எகிப்து செல்கிறார். இந்தியப் பிரதமர் 1997க்குப் பிறகு எகிப்து செல்வது இதுவே முதல்முறையாகும்.

இரண்டு நாட்களில் எகிப்து நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இது இந்தியா எகிப்து நாடுகளுக்கும் இடையேயான உறவில் முக்கியமானதாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

எகிப்து பயணம் குறித்து முன்னதாக கடந்த 20ஆம் தேதி பிரதமர் மோடி கூறுகையில், "இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த எகிப்து அதிபர் சிசி இங்கு வந்ததில் மகிழ்ச்சி. இப்போது நான் எகிப்து செல்கிறேன். சில மாத இடைவெளியில் நடந்துள்ள இந்த பயணங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு வலுவான உறவை ஏற்படுத்துவதில் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று, அதாவது ஜூன் 24 எகிப்து நாட்டிற்குச் செல்லும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அரசு வரவேற்பு அளிக்கப்படும். அதன் பிறகு இந்தியா உடனான உறவை மேம்படுத்த அந்நாட்டின் அதிபர் சிசி உருவாக்கியுள்ள உயர்மட்ட அமைச்சர்கள் கொண்ட குழுவைப் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அதைத் தொடர்ந்து எகிப்து நாட்டில் வசிக்கும் இந்தியக் குழுவுடனும் அவர் உரையாடுகிறார். பின்பு, எகிப்து நாட்டின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கிறார்.

நாளை ஜூன் 25ஆம் தேதி பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்-ஹகிம் மசூதிக்குச் செல்கிறார். அதைத் தொடர்ந்து எகிப்து அதிபர் மாளிகைக்குச் செல்லும் பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் சிசி அங்கே வரவேற்பார். அங்கு இரு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. மேலும், பிரதமர் மோடிக்கு அரசு விருந்தும் அளிக்கப்படவுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பில் சேர எகிப்து விண்ணப்பித்துள்ளது மேலும், சர்வதேச வணிகத்தில் டாலரே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதைக் குறைக்கவும் மாற்றாக வேறு நாணயங்களைப் பயன்படுத்தவும் பிரிக்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளன. பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைவது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் தனது இந்தப் பயணத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, கல்வி மற்றும் பிரிக்ஸ் அமைப்பில் சேர எகிப்தின் விண்ணப்பம் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. எகிப்தில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. மேலும், சூயஸ் கால்வாயின் மீதான கட்டுப்பாடும் இருக்கிறது. இப்படி சர்வதேச வணிகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் எகிப்து பிரிக்ஸில் இணைவது இரு தரப்பிற்குமே நல்லது.

இது எகிப்து மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், பிரிக்ஸ் அமைப்பில் சேர எகிப்தின் விண்ணப்பம், மற்ற ஆப்பிரிக்க நாடுகளையும் இது குறித்துச் சிந்திக்க வைக்கும். இப்போது சர்வதேச வர்த்தகம் அனைத்துமே டாலரில் நடந்து வரும் நிலையில், அந்த நிலையை மாற்ற இது மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும். அதாவது எகிப்து போலப் பல உலக நாடுகள் பிரிக்ஸில் இணைந்தால், அது டாலரை சார்ந்து இருக்கும் நிலைமையை மாற்றும்.

அரசியல், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் கல்வி ஒத்துழைப்பு ஆகிய நான்கு விஷயங்களை மையமாக வைத்து பிரதமரின் எகிப்து பயணம் அமையும் என இந்திய அதிகாரிகள் கூறினர்.


Related Post