கோவை: ஜீவனாம்ச வழக்கில், 80,000 ரூபாய்க்கு கோர்ட்டில் சில்லறை காசுகளாக கொடுத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றம் வாங்க மறுத்ததால் இன்று நோட்டுகளாக ஒப்படைத்தார்.
கோவை: கோவை கோர்ட்டில் விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவற்காக ரூ.80 ஆயிரம் பணத்தை சில்லறைகளாக அள்ளிக் கொண்டு வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்து கோயம்புத்தூரில்?
விவாகரத்து வழக்கு: கோவை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் தினமும் ஏராளமான வழக்குகள் நடந்து வருகிறது.. இதில், விவாகரத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி, குடும்ப பிரச்னை காரணமாக விவாகரத்து கோரி, கோவை கூடுதல் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், கணவன் தரப்பிலிருந்து இடைக்கால ஜீவனாசம் வழங்க கோரி அதே நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 2 லட்சம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டு இருந்தது... இதில், முதற்கட்டமாக, 80,000 ரூபாய் பணத்தை, கோர்ட்டில் செலுத்துவதற்காக கணவர் வந்திருந்தார்.
சில்லறை நாணயங்கள்: ஆனால், அவைகளை நோட்டாக கொடுக்காமல், 1 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாக சுமார் 20 மூட்டைகளில் கட்டிக்கொண்டு, கோர்ட்டுக்கு வந்தார்.. அதாவது 1 ரூபாய் நோட்டு கட்டிற்கு பதிலாக, ஒரு ரூபாய் நாணயங்கள், 2 ரூபாய் கட்டுக்கு பதிலாக 2 ரூபாய் நாணயங்கள் என 80,000 ரூபாயை சேகரித்து, மொத்தம் 20 சாக்கு பைகளில் கொண்டு வந்திருந்தார். கோர்ட்டிற்கு சாக்கு பையுடன் வந்த நபரை, கோர்ட்டிலிருந்த வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்..
மூட்டைகளில் கொண்டு வந்த ரூ.80 ஆயிரம் நாணயங்களையும் நீதிபதி கஜரா ஆர்.ஜிஜி முன்னிலையில் வழங்கினார்.. நாணய மூட்டைகளை பார்த்த நீதிபதி, "நாணயங்களை கையோடு கொண்டு சென்று, நோட்டாக மாற்றி வர வேண்டும்" என்று அறிவுரை வழங்கினார்.. அத்துடன், இந்த வழக்கையும் ஒத்திவைத்தார்.
பரபரப்பு: நீதிபதி இவ்வாறு சொன்னதுமே, அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்த நாணயங்களை, தன்னுடைய காரில் ஒவ்வொன்றாக ஏற்றி வைத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார்... பிறகு, 500 ரூபாய் நோட்டுகளாக சேர்த்து, 80,000 ரூபாயை கோர்ட்டில் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு போனார்.. மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க நாணயங்களை மூட்டை கட்டி கொண்டு வந்த கணவரால் கோர்ட்டில் இப்படியொரு பரபரப்பு இன்று நடந்துவிட்டது.