சென்னை: சின்னதிரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதித்து உயிரிழந்த நிலையில், பொதுவாக இந்த நோய் யாரை எல்லாம் பாதிக்கும்? எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கட்டாயம் அனைவரும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
சின்னதிரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் இத்தனை வருடங்களாகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி வந்திருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. அவரை அறிந்த அவரது நண்பர்கள் இப்போதுதான் தங்களிடம் நேத்ரன் பகிர்ந்து கொண்ட விசயங்களை வெளிப்படையாகப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
பொதுவாக மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் இருக்கிறது. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இறுதிக் கட்டத்தில்தான் பலரும் சிகிச்சைக்கு முன்வருகின்றனர். ஆரம்பத்திலேயே அதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அதிலிருந்து முழுமையாகக் குணமடையலாம். அதையே மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
உடலில் உள்ள உறுப்புகளில் எங்கே வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். மூளையில் வரலாம். சதை மற்றும் தோல் பகுதியில் வரலாம். கிட்னி, கல்லீரல் என எந்தப் பாகத்தையும் புற்றுநோய் பாதிக்கலாம். புற்றுநோய் என்பதன் அர்த்தம் என்ன? abnormal self calibration என்பதுதான் புற்றுநோய். அப்படி என்றால் என்ன? அதற்காக விளக்கத்தை டாக்டர் சபரிநாத் அளித்துள்ளார். உடலில் உள்ள இயற்கையான அணுவானது அசாதாரண அனுவாக மாறுவதே புற்றுநோய் என்கிறார்கள் என்று அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இந்த அணு எங்கே வருகிறதோ அந்தப் பாகத்திற்கு தகுந்த மாதிரி நோயின் பெயர் மாறுபடும் என்றும் மார்பகத்தில் வந்தால் மார்பக புற்றுநோய், மூளையில் வந்தால் மூளை புற்றுநோய் என்று சொல்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்தப் புற்றுநோயின் குணம் பற்றிப் பேசிய சபரிநாத், "இந்தப் புற்றானது உடலில் உருவான பிறகு அடுத்து அடுத்துக் குட்டிப் போடத் தொடங்கும். அதாவது உடலில் பரவும். ஒரு பகுதியில் உருவாகும் புற்றானது அடுத்தடுத்த பாகங்களுக்குப் பரவும் நிலையைத்தான் நான்காவது நிலை என்கிறார்கள். அது ஆபத்தானது" என்கிறார்.
சின்னதிரை நடிகர் நேத்ரன் விவகாரத்தில் அவருக்கு என்ன மாதிரியான புற்று என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. அவர் கல்லீரலில் புற்று முற்றிப் போனதால் உயிரிழந்துள்ளார் என்கிறார்கள். எந்தப் புற்றுநோய் வந்தாலும் கல்லீரலைப் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புற்றுநோய் வந்தாலே உடலில் உள்ள பாகங்கள் தனது இயக்கத்தை குறைத்துக்கொள்கிறது. அதனால் உடலில் வழக்கமாக ஏற்படக்கூடிய பசி இருக்காது. அதனால் சாப்பிடத் தோன்றாது. உடலில் செரிமானமும் நடக்காது. அதன்மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். ஆகவே புற்றுநோய் பாதித்தவர்களுக்குத் தொற்றுநோய்கள் நிறைய ஏற்படும். ஆகவே பல புற்றுநோயாளிகள் இறப்பதற்கு முக்கிய காரணம் தொற்றுநோய்களால்தான் என்கிறார் டாக்டர் சபரிநாத்.
அதாவது ஒரு பகுதியில் ஏற்படும் புற்றுநோய் உடலைச் சீர்குலைக்கிறது. அதனால் உடலில் பல நோய்த் தொற்றுகள் எளிமையாக உருவாகின்றன. இறுதியாக ஒரு பகுதியே புற்றுநோய் ஏற்படுவதால், அது செயல் இழந்துவிடுகிறது. அப்படி வீணாகப் போகும் பாகத்தை மாற்றவும் முடியாது. அதற்காகச் சக்தி உடலில் இருக்காது.
புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?:
1. உடல் எடை குறைந்து கொண்டே வரும். இது அனைத்து வகையான புற்றுநோய்க்கும் பொருந்தும். ஆகவே உடல் எடை திடீரென்று குறைந்தால் அது குறித்து விழிப்புணர்வு தேவை.
2. சாப்பாட்டின் மீது ஆர்வம் இருக்காது. எவ்வளவு விருப்பமான உணவைக் கொடுத்தாலும் அதை உண்ண விருப்பம் இருக்காது.
3, உடலில் உள்ள தோல்கள் வெளுத்துப் போவது. வறட்சியாகக் காணப்படும். ரத்தசோகை வந்தவரைப் போல அறிகுறிகள் தென்படும். ரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கும். ஆகவே, 20 வயது இளைஞர் 50 வயது முதியவர் போல் காட்சி தருவார். இதுவும் ஒரு அறிகுறி
4. எந்த உறுப்பில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதோ அதற்கு ஏற்ப உடல் பிரச்சினைகள் உருவாகும். நுரையீரல் என்றால் ரத்தவாந்தி, மூச்சு விடமுடியாமல் தவிப்பது, தொடர்ச்சியாக இருமல் என வரும். அதே கிட்னி புற்று எனில் சிறுநீரில் ரத்தம் வெளியேறலாம். சிறுநீர் சரியாக வரமால் இருக்கலாம். வலி ஏற்படலாம். ஆகவே எந்த உறுப்பாக இருந்தாலும் அதில் ஏற்படும் மாற்றங்களைக் கவனமாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறவேண்டும். ஏனெனில் முதல்நிலை உள்ள புற்றுநோய் என்பது பெரிய அளவில் அறிகுறிகளைக் காட்டாமல் இருக்கும். அதனால் பலர் அலட்சியமாக இருந்து விடுவர்.
5. ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஏனெனில் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். ஒருவேளை எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவருக்கும் புற்றுநோய் பாதிப்பு வரக்கூடும். அதற்கு மரபணு சார்ந்த பிரச்சினைகள் ஒரு முக்கிய காரணம். குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்குப் புற்று இருந்தால், அது அடுத்த தலைமுறையைப் பாதிக்கும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage