ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிரடியான 6 தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கப் போகிறார் என்ற தகவல் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
தெலுங்கானா மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தெலுங்கானா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஆளும் பிஆர்எஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே தெரிவிக்கின்றன. ஆனால் பாஜகவோ 'எப்படியாவது' ஆட்சி நம் வசமாகும் என நம்புகிறது. இதற்காகவே மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை மாநில தலைவராக்கி களத்தில் இறக்கிவிட்டுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சிக்கும் ஒருநம்பிக்கை இருக்கிறது. 2 முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் முதல்வர் கேசிஆர் அரசு மீது அதிருப்தி இருக்கிறது; இதனை அறுவடை செய்ய முடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் திட்டம்.
இதற்கான ஆயுதமாக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசப் போகிறது காங்கிரஸ். தமிழ்நாட்டில் திமுக, பெண்களுக்கு மாதம் ரூ1,000 என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடகாவில் இதேபோல பெண்களுக்கு மாதம் ரூ2,000 என வாக்குறுதி வழங்கி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துவிட்டது.
தமிழ்நாட்டில் 30 மாதங்களுக்குப் பின்னர்தான் பெண்களுக்கு ரூ1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இத்திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது.
இதனையே அண்டை மாநிலமான தெலுங்கானா தேர்தலுக்கான யுக்தியாகவும் காங்கிரஸ் கையில் எடுக்க இருக்கிறது. ஹைதராபாத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.
சோனியாவின் நாளைய தேர்தல் பிரசார கூட்டத்தில் 6 முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட இருக்கிறதாம். அதாவது பெண்களுக்கு மாதம் ரூ3,000 வழங்கப்படும்; சிலிண்டர் விலை ரூ500-க்கு வழங்கப்படும்; வீடுகள் கட்டுவதற்கு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்பவை முக்கியமானதாக இருக்குமாம். சோனியா காந்தியின் 6 தேர்தல் வாக்குறுதிகள் தெலுங்கானா தேர்தல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.