மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே திருமணமான பத்துக்கும் மேற்பட்ட பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தை பேசி அவர்களை மயக்கியதோடு பணம் நகைகளை பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கைதான இளைஞருக்கு அவரது குடும்பமே உடந்தையாக இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.
திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்கள் - பெண்களையும், வயதாகியும் திருமணமாகாத முதிர் கன்னிகளை குறி வைத்து பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் இளம்பெண்கள் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நகை பணத்துக்காக விவாகரத்தான ஆண்களை கல்யாண புரோக்கர் மூலம் குறிவைத்து, மேக்கப் போட்டு ஏமாற்றிய 54 வயது ஆண்டியை காவல்துறையினர் கைது செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால் சற்று வித்தியாசமாக கணவர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியே வசித்து வரும் திருமணமான பெண்களை குறி வைத்து அவர்களிடம் நைசாக பேசி பழகி பணம் நகையை பறித்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் தான் தற்போது போலீசார் வலையில் சிக்கி இருக்கும் மன்மதன்.
தனது குடும்பத்தினர் மூலம் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வசிக்கும் பெண்கள் வீட்டில் பிரச்சனை இருக்கும் பெண்களை குறி வைப்பது தான் இவரது வேலை. இந்த நிலையில் அப்படி சிக்கியவர் தான் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர். ஆனால் இவருக்கு திருமணமாகவில்லை. திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரிடம் பணம் நகையை பறித்ததாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போது தான் ஜாகிர் உசேன்னின் மன்மத லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தது.
முன்னதாக அந்த இளம் பெண்ணை சந்தித்த ஜாகிர் உசேன் அவரை காதலிப்பதாக கூறி பேசி பழகி உள்ளார். ஜாகிர் உசேனுக்கு அந்த இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தது அவரது சகோதரி என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி இருக்கிறார். மேலும் அவரிடம் இருந்து சிறிது சிறிதாக 14 சவரன் தங்க நகைகள் 2 லட்சம் பணம் ஆகியவற்றை பெற்றதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அந்த இளம் பெண் கர்ப்பமான நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் கரு கலைப்பு மாத்திரைகள் கொடுத்து அந்த இளம் பெண் கர்ப்பத்தை கலைத்ததோடு, அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வற்புறுத்தி கேட்டபோது அந்த பெண்ணுடன் இருந்த தனிப்பட்ட வீடியோக்களை பரப்பி விடுவதாக மிரட்டி இருக்கின்றனர் ஜாகிர் ஹுசைனின் குடும்பத்தினர்.
இதை அடுத்துதான் ஜாகிர் உசேன் மீது அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இதே போல ஜாகிர் உசேனின் மற்றொரு உறவுக்கார பெண்ணும் ஜாகிர் உசேன் தன்னை மிரட்டியதாக பாலியல் புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஜாகிர் ஹுசைன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்த விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தான் பல பெண்களுடன் ஜாகிர் உசேன் உறவில் இருந்ததும், குறிப்பாக திருமணமான பெண்களை குறி வைத்து அவர்களிடம் பணம் நகை உள்ளிட்டவற்றை பெற்று, கார், புல்லட் பைக் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.