நெல்லை: கேரளாவில் இருப்பவர்களுக்கு நெல்லையில் குப்பைக் கொட்டும் அந்த பகுதிகள் எப்படி தெரியும் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகளை கொட்டும் விவகாரத்தில் தலைமை ஏஜென்டாக செயல்பட்ட அந்த மாவட்டத்தின் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மனோகர் (51), மாயாண்டி (42) என்பவரும் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தலைமையில் சுத்தமல்லி காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு கேரளாவில் இருந்து இந்த பகுதியில் கழிவுகளை கொட்டி செல்லலாம் என இடத்தை தேர்வு செய்து சதி செய்தது அம்பலமானது.
மருத்துவக் கழிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. புகார் வரப்பெற்ற இடம் மட்டுமில்லாமல் வேறு பகுதிகளில் ஏதேனும் கொட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது அதில் ஒரு இடத்தில் கண்டறியப்பட்டு அதிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் அனைத்து விவரங்களும் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல்முறையாக பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் பிணையில் வெளியே வர இயலாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக கழிவுகள் எந்தெந்த நிறுவனங்களில் இருந்து உருவானதோ அந்த நிறுவனங்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியமே கழிவுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு முதல்முறையாக பசுமை தீர்ப்பாயத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு வாசக் கட்டுப்பாட்டு வாரிய மற்றும் அரசின் தொடர் முயற்சிகள் முக்கிய காரணமாகும்.
எத்தனையோ இடங்களில் இதுபோல கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கலாம். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் தான் முதல்முறையாக இவ்வளவு கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் இருப்பவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் இந்த பகுதி எப்படி தெரியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பித்ததாகவும் கிடுக்கிப் பிடி விசாரணையில் அவர்கள் இருவரும் தாங்கள்தான் கேரளாவில் இருக்கும் இது போன்ற ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு இடத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 10 இடங்களில் கழிவுகளை கொட்டி செல்வதற்கு உருதுணையாக இருந்ததும் தெரிய வந்ததாக எஸ் பி சிலம்பரசன் தெரிவித்தார்.
தமிழக எல்லையில் குப்பைகளைக் கொட்டும் பழக்கம் நீண்ட நாட்களாக கேரளாவுக்கு இருந்து வருகிறது. இதனால் கடுமையான பிரச்சினைகளை சந்தித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குப்பைகளுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது: இனியும் கேரளா அரசு இது போல் தமிழக எல்லைகளில் குப்பை கொட்டி வந்தால் இனி தமிழகத்திலிருந்து லாரி லாரியாக குப்பைகளுடன் நான் செல்வேன். அங்கு போய் குப்பைகளை கொட்டுவன் என தெரிவித்திருந்தார்.