அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இனி "இதுவும்" கிடைக்குமா.. அப்ப பாமாயில்?

post-img

ரேஷன் பொருட்களில் கூடுதலாக மற்றொரு பொருளை வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு அடுத்தடுத்த கோரிக்கைகள் பறந்தவண்ணம் உள்ளன.

இதையடுத்து தமிழக அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்ன செய்ய போகிறது?என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் எழுந்துள்ளது.. அமைச்சர் சக்கரபாணி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்திருந்தார்.

கன்னியாகுமரி:

அதில், "தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்... அதன்படி, முதற்கட்டமாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே, தமிழ்நாடு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும், பாமாயில் கொள்முதல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகளும் எழுந்தன.. உழவர் உழைப்பாளர் கட்சி இந்த கோரிக்கையை விடுத்திருந்தது.

ஒப்பந்தப்புள்ளி: காரணம், தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருள்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும், அக்கட்சி தன்னுடைய காரணத்தை தெரிவித்திருந்தது.

தேங்காய் விவசாயிகள்: இந்நிலையில், தமிழக தேங்காய் விவசாயிகளிடம் இருந்து தேங்காய்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து தமிழ்நாட்டில் தேங்காய் கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு வழங்க வேண்டும்" என்றும் தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு சார்பில் கோரிக்கைகள் வெடித்தன.

இந்த லிஸ்ட்டில், விவசாய சங்கமும் சேர்ந்துள்ளது.. விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் இதை பற்றி சொல்லும்போது, சமீப நாட்களாகவே, கொப்பரை தேங்காய் விலை மிகவும் சரிவடைந்து வருகிறது. வெளி மார்கெட்டில், 73 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை, இபபோது 70 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது... விளை நிலங்களில், 7 முதல் 9 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.

தென்னை: இதனால், தென்னையை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. தக்காளி விலை உயர்ந்ததும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருதி, கூட்டுறவு சங்கம் மூலம் தக்காளி உரிய விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார்.. அதை உடனே நடைமுறைப்படுத்தியும் உள்ளார்.

முன்னதாக, தக்காளி விலை சரிவடைந்தபோது, எண்ணற்ற விவசாயிகள் பாதிக்கப்பட்டும், அமைச்சர் வாய் திறக்கவில்லை.. இதேபோல், இப்போது கொப்பரை விலையும் தென்னை விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை தவிர்க்க, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை எதுவும் நடவடிக்கை இல்லை. இப்போதும் இதே கோரிக்கையை வைக்கிறோம்.

தமிழக அரசு: கொப்பரைக்கு உரிய விலை வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.. இதே கோரிக்கையை வலியுறுத்தி விரைவில், கூட்டுறவு துறை அமைச்சருக்கு தேங்காய் அனுப்பும் போராட்டம் நடத்த போகிறோம்" என்றார். ரேஷனில் தேங்காய் தரப்பட வேண்டும் என்று நாலாபக்கமும் கோரிக்கைகளும், போராட்டங்களும் வெடித்துள்ளதால், அரசு இதை பரிசீலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Related Post