பாஜக எம்பிக்கள் கீழே தள்ளி தாக்குதல்- சபாநாயகருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்- பிரியங்கா சாட்சியம்!

post-img
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தம்மை பாஜக எம்பிக்கள் கீழே தள்ளிவிட்டதால் தமக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், பாஜக எம்பிக்கள் தம்மை கீழே தள்ளி தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் மலிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இது என் மீதான தனிப்பட்ட தாக்குதல் அல்ல; நாடாளுமன்ற ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மீதான தாக்குதல். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மீதான தாக்குதல். ஆகையால் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் பாஜக எம்பிகள் பதாகைகளுடன் கனமான தடிகளையும் கொண்டு வந்திருந்தனர்; அந்த தடிகள் மூலம் இந்தியா கூட்டணி எம்பிக்களை பிடித்து தள்ளிவிட்டனர் என்றும் தமது சமூக வலைதளப் பக்கங்களில் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டிஉள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எம்பி கூறியதாவது: நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துடன் ஜெய்பீம் என அமைதியான முறையில் ராகுல் காந்தி முழக்கம் எழுப்பிக் கொண்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். ஆனால் ராகுல் காந்தியை உள்ளே தடுத்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். நாள்தோறும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர். இன்று அமித்ஷாவை பாதுகாக்க பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தியை தள்ளிவிடும் சதித் திட்டத்துடன்தான் இந்த போராட்டத்தை பாஜக எம்பிக்கள் நடத்தினர். என் கண் முன்னாலே மல்லிகார்ஜூன கார்கே கீழே தள்ளிவிடப்பட்டு தரையில் விழுந்தார். அதன் பின்னர் சிபிஎம் எம்பி ஒருவரையும் தள்ளிவிட அவரும் மல்லிகார்ஜூன கார்கே மீது விழுந்தார். இது அப்பட்டமான சதித் திட்டம்தான். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தள்ளு முள்ளு மற்றும் மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கியின் மண்டை உடைந்தது; மற்றொரு எம்பி முகேஷ் ராஜ்புத் கடுமையாக பாதிக்கபட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த பாஜக எம்பிக்களை மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சி எம்பிக்கள் நேரில் சென்று விசாரித்தனர்.

Related Post