டெல்லி: கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைச் சந்தித்து இருந்தது. காங்கிரஸ் வரலாற்றிலேயே அது மிகவும் மோசமான ஒரு தோல்வியாக இருந்திருந்தது.. இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர்.. அப்போது என்ன நடந்தது.. காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் எ மேவரிக் இன் பாலிடிக்ஸ் என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அவர் தனது புத்தகம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கடந்த 2014 லோக்சபா தேர்தல் சமயத்தில் என்ன நடந்தது.. காங்கிரஸ் மோசமான தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்
லோக்சபா தேர்தல்: கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் பாஜக மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி மொத்தம் 336 இடங்களில் வென்றது. குறிப்பாக பாஜக மட்டும் 282 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.
இதற்கிடையே 2013இல் காங்கிரஸ் கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் சரியாக இல்லை என்றும் அதுவே மோசமான தோல்விக்குக் காரணம் என்றும் மணிசங்கர் ஐயர் தெரிவித்தார். மேலும், பிரணாப் முகர்ஜியை பிரதமராகவும், மன்மோகன் சிங் குடியரசுத் தலைவராகவும் இருந்து இருந்தால் 2014ம் ஆண்டு தேர்தல் காங்கிரஸ் அவமானகரமான தோல்வியைச் சந்தித்திருக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். அப்படி நடந்திருந்தால் 2014ம் ஆண்டு தேர்தல் முடிவுகளே வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்றும் மணிசங்கர் ஐயர் குறிப்பிட்டார்.
மணிசங்கர் ஐயர்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நீங்கள் பார்த்தீர்கள் என்றால்.. கடந்த 2012இல் எங்களுக்கு இரண்டு சிக்கல்கள் ஏற்பட்டு இருந்தன. ஒன்று சோனியா காந்தி மிகவும் நோய்வாய்ப்பட்டுப் போய் இருந்தார். டாக்டர் மன்மோகன் சிங்குக்கு ஆறு பைபாஸ்கள் செய்யப்பட்டன. இதனால் கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் செயல்பட முடியாமல் முடங்கினோம்.
ஆனால் அப்போதும் புதிய ஆற்றல், புதிய யோசனைகள், அதிக மக்கள் ஆதரவுடன் ஒருவர் இருந்தார். அவரால் கட்சி அல்லது ஆட்சி அல்லது இரண்டையும் எளிதாக நடத்தி இருக்க முடியும்.. அவர் தான் பிரணாப் முகர்ஜி. அந்த நேரத்தில் மன்மோகன் சிங்குக்குப் பதிலாக பிரணாப் முகர்ஜி பிரதமராக்கப்படுவார் என்றே அனைவரும் நினைத்தோம். பிரணாப் கூட அப்படியே நினைத்து இருந்தார்.. அதாவது பிரணாப் முகர்ஜி நாட்டின் பிரதமராகவும் மன்மோகன் சிங் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
பல காரணங்கள்: இது மட்டும் நடந்திருந்தால் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் இந்தளவுக்கு மோசமான தோல்வியைச் சந்தித்து இருக்காது. அது மிக மோசமான தோல்வியாக மட்டும் இருக்கவில்லை.. எங்களால் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. 1984ம் ஆண்டு 414 இடங்களில் வென்று இருந்த காங்கிரஸ், 2014ல் வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றதை ஏற்கவே முடியாது.
அந்த சமயத்தில் எங்கள் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வந்தன. குறிப்பாக 2ஜியை சொல்லலாம்.. கனிமொழி, ஆ ராசா சிறையில் இருந்தனர். ஆனால், அதில் ஊழல் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இப்படிப் பல விஷயங்களைச் சொல்லலாம். பிரணாப் முகர்ஜி ஆட்சி செய்து இருந்தால்.. நிச்சயம் நாங்கள் ஆட்சியைத் தக்கவைத்து இருப்போம் என நான் சொல்லவில்லை. ஆனால் 44 சீட்களுக்கு சரிந்து இருக்க மாட்டோம்.. குறைந்தது 140 சீட்களில் வென்று இருப்போம்" என்றார்.