டெல்லி: உலக நாடுகள் மத்தியில் மோதல்கள் வலுத்து வரும் சூழலில் துருக்கியால் நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகி உள்ளது. குறிப்பாக துருக்கி நாட்டு ட்ரோன்களால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. துருக்கி ட்ரோன்களால் நம் நட்பு நாடான ரஷ்யாவே கலங்கி நிற்கும் சூழலில் பிரதமர் மோடி எப்படி சமாளிக்க போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நம் நாட்டுடன் பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் பாகிஸ்தான், சீனா நீண்டகாலமாக நம்முடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. வங்கதேசம் நம் நாட்டுடன் நட்பாக இருந்தது. ஆனால் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமாவுக்கு பிறகு இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையே இதுவரை இல்லாத அளவுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு வங்கதேசத்தின் இடைக்கால அரசு தலைவரான நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தான் முக்கிய காரணம். ஷேக் ஹசீனா, பாகிஸ்தான் மற்றும் சீனாவை புறக்கணித்து நம்நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தார். ஆனால் முகமது யூனுஷ் நம் நாட்டுடன் மோதலை தொடங்கி பாகிஸ்தான், சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இது தான் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
அதுமட்டுமின்றி தற்போது வங்கதேசம் நம் நாட்டின் எல்லையான கோழிக்கழுத்து பகுதியில் Bayraktar TB2 வகை ட்ரோன்களை வைத்து உளவு பார்க்க தொடங்கி உள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம் வழியாக வடகிழக்கு மாநிலங்களை நம் நாட்டுடன் இணைக்கும் கோழிக்கழுத்து பகுதி என்பது இந்தியா - வங்கதேசத்தின் எல்லையாக உள்ளது. அங்கு தான் தற்போது Bayraktar TB2 வகை ட்ரோனை வங்கதேசம் பயன்படுத்தி வருகிறது. இந்த ட்ரோன் நவீன தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு தாக்குதலை தொடுக்கும் திறன் கொண்டது.
இந்த ட்ரோன்கள் நவீன கண்காணிப்பு கேமரா, ரியல்டைம் வீடயோ டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட வசதியை கொண்டுள்ளது. அதோடு ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த போர் ட்ரோனால் எம்ஏஎம் - எல், எம்ஏஎம் - சி உள்ளிட்ட ஏவுகணைகள் உள்பட 4 தாக்குதல் நடத்தும் பொருட்களை சுமந்து செல்ல முடியும். இதில் சென்சார் உள்ளர். லேசர் தொழில்நுட்ப தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. அதோடு 25,000 ஆயிரம் அடி உயரம் பறக்கும் திறன் கொண்டது.
இதுதான் நம் நாட்டுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதையடுத்து இந்தியாவும் வங்கதேசத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கு வங்க எல்லையில் இருந்து வங்கதேசத்தை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டுடன் எல்லையை பகிரந்து கொள்ளாத துருக்கியால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது இந்தியா - வங்கதேச எல்லையில் கோழிக்கழுத்து பகுதியில் வங்கதேசம் பயன்படுத்தும் Bayraktar TB2 ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்த ட்ரோனை தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் பெயர் Baykar.
கடந்த 3 ஆண்டுகளில் அதிக ட்ரோன்களை உற்பத்தி செய்த நிறுவனமாக இது உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் செல்சுக் பைரக்டர் (Selcuk Bayraktar). இவர் யார் என்றால் விமான தொழில்நுட்பத்தை நன்கு அறிந்த இன்ஜினியர். அதோடு பைலட்டாகவும் இருந்தவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக துருக்கி நாட்டின் அதிபராக இருக்கும் தையிப் எர்டோகனின் மருமகன் ஆவார். மேலும் துருக்கி நாட்டின் தையிப் எர்டோகனுக்கு அடுத்த அரசியல் வாரிசாக இவர் கருதப்பட்டு வருகிறார்.
மேலும் உலகலாவிய ட்ரோன் சந்தையில் 65 சதவீததை துருக்கி தான் வைத்துள்ளது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் உலகில் உற்பத்தி செய்யப்படும் ட்ரோன்களில் 65 சதவீதம் துருக்கியில் இருந்து தான் வருகிறது. அதேபோல் போரில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் 60 சதவீதம் துருக்கியில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். இதற்கு செல்சுக் பைரக்டரின் நிறுவனம் தான் முக்கிய காரணமாகும்.
குறிப்பாக துருக்கியில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் போர் ட்ரோன்களில் பைரக்டர் டிபி 2 வகை தான் முன்னிலையில் உளளது. அதோடு துருக்கியின் மொத்த பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்களின் ஏற்றுமதி என்பது ஆண்டுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள நிலையில் 3ல் ஒரு பங்கு Baykar ட்ரோன் ஏற்றுமதி நிறுவனத்தின் இருந்து செல்கிறது. 2023ம் ஆண்டில் இந்த நிறுவனம் 90 சதவீத வருவாயை வெளிநாடுகளில் இருந்து ஈட்டியது. அதாவது 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வெளிநாட்டில் இருந்து அந்த நிறுவனம் வருமானம் ஈட்டியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி பார்த்தால் Bayraktar TB2 போர் ட்ரோனை கொள்முதல் செய்ய 34 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் போர் சூழலில் துருக்கி ட்ரோன்கள் எதிராளிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது தான். அதாவது சமீபத்தில் கூட ரஷ்யா - உக்ரைன் போரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்முன் நிறுத்தும் வகையில் ரஷ்யாவின் கைசன் நகரில் அடுக்குமாடி கட்டடத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. அதேபோல் ரஷ்யாவில் இன்னும் பல இடங்களில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவே களங்கிபோய் நிற்கிறது. ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்யாவை களங்கடித்த உக்ரைனின் பின்னணியில் துருக்கியின் பங்கு பெரிய அளவில் உள்ளது. ஏனென்றால் ரஷ்யாவை தாக்க உக்ரைன் பயன்படுத்தும் ட்ரோன்கள் துருக்கியில் இருந்து பெறப்பட்டவையாகும். இப்படியாக துருக்கி நாட்டின் ட்ரோன் வல்லரசு நாடான ரஷ்யாவையே கலங்கடிக்க செய்துள்ளது.
இதுதவிர 2020ல் நடந்த அஜர்பைஜன் - ஆர்மேனியா இடையேயான மோதலில் அஜர்பைஜன், துருக்கி ட்ரோன்களை பயன்படுத்தி வெற்றி பெற்றது. அதேபோல் வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் நடந்த உள்நாட்டு மோதலில் துருக்கி ட்ரோன்களை பயன்படுத்திய நாடுகள் வெற்றி பெற்றன. சமீபத்தில் சிரியா மோதல்களிலும் துருக்கி நாட்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கு சிரியாவில் குர்திஷ் படைகளை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள் துருக்கி ட்ரோன்களை பயன்படுத்தி பலரை கொன்று வருகின்றன.
இதனால் பல நாடுகளும் துருக்கியில் இருந்து ட்ரோன் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டி ஆர்டர்களை வழங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தானை தொடர்ந்து வங்கதேசமும், துருக்கி நாட்டின் ட்ரோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளன இதுதான் நம் நாட்டுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. இதுதவிர துருக்கியை பொறுத்தவரை நம் நாட்டுடன் நல்ல உறவு என்பது இல்லை. அதேவேளையில் பாகிஸ்தானுடன், துருக்கி நல்ல உறவில் உள்ளது. அதேபோல் காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் துருக்கி, நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் உள்ளது.
அதோடு சமீபத்தில் கூட துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனமான ரெப்கான் பாகிஸ்தானில் 155 மில்லி மீட்டர் பீரங்கிகளை தயாரிக்க ஆலையை தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கு முன்பாக கடந்த ஜூலை 10ம் தேதி வெளியுறவுத்துறை குழு விவாதத்தின்பாது துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறையில் முன்னணி ஆயுத நிறுவனமான எஸ்எஸ்பியின் துணை தலைவர் முஸ்தபா முராத் சேகர் தான் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதன்படி இந்தியாவுக்கு பாதுகாப்பு துறை சார்பில் ராணுவ தளவாடங்களை அனுப்புவதை ரத்து செய்வதாகவும், இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் துருக்கி நாட்டின் ட்ரோன் தொழில்நுட்பம் என்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் துருக்கி நாட்டின் Bayraktar TB2 ட்ரோன்களை வைத்து மிரட்டி வருவதால் பிரதமர் மோடி எப்படி சமாளிக்க போகிறார்? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.