பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கழுத்து பகுதியில் டாட்டூ குத்தியதால் இளைஞர் ஒருவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கியுள்ளார்கள்.
அந்த காலத்தில் பச்சை குத்துதல்தான் தற்போது டாட்டூ என அழைக்கப்படுகிறது. நம் தாத்தா, பாட்டி காலத்தில் தாத்தாவின் பெயரை பாட்டியும் பாட்டியின் பெயரை தாத்தாவும் பச்சை குத்திக் கொள்வார்கள். இன்னும் சிலர் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட ஹீரோ, ஹீரோயின்களின் உருவத்தையோ பெயரையோ பச்சை குத்தி கொள்வார்கள்.
இன்னும் சிலர் தங்கள் இஷ்ட தெய்வத்தையோ மனைவி, காதலியின் முகம், பெயரையோ கூட குத்திக் கொள்வார்கள். இந்த பச்சை குத்துதல் வலியை கொடுக்கும் மேலும் காய்ச்சல் வரும் என்பார்கள். தற்போது இந்த பச்சை குத்துதலே நரிக்குறவர்களிடம் அச்சு போல் வந்துவிட்டது.
பச்சை குத்தினால் கடைசி வரை அழியாது. ஆனால் தற்போது உள்ள அச்சு முறை அழிந்துவிடும். இதையெல்லாத்தையும் விட தற்போது டாட்டூ எனப்படும் பச்சை குத்தும் நவீன முறை டிரெண்டாகி வருகிறது. ஆண், பெண் பேதமில்லாமல் குத்திக் கொள்கிறார்கள். பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என டாட்டூவுடன் வருகிறார்கள்.
சிலர் கழுத்து, காது பின்புறம், தோள்பட்டை, கைகள், கால்கள், நெஞ்சு என டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். மல்யுத்த வீரர்கள், ஆங்கில படங்களில் நடிப்பவர்களை பார்த்திருக்கிறோம். பார்ப்பதற்கு ஏதோ டிசைனான ஆடை அணிந்துள்ளது போன்றே இருக்கும்.
இதில் permanent tatoo, temporary tatoo என உள்ளது. தங்களுக்கு தேவையான டாட்டூவை குத்திக் கொள்கிறார்கள்.பெண்கள் மார்பக பகுதிகளில் கூட டாட்டூ குத்திக் கொள்ளும் காலம் உள்ளது. இந்த நிலையில் இப்படிப்பட்ட டாட்டூவை குத்திய கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்தவர் பரத் (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் 20 நாட்களுக்கு முன்பு புதுவைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பரத், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூவாக குத்தியுள்ளார்.
இதன் பின்னர் ஊர் திரும்பிய பரத்திற்கு டாட்டூ குத்திய பகுதியில் புண் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நரம்பு பாதிக்கப்பட்டதுடன் கையின் அக்குள் பகுதியில் நெரிகட்டிக் கொண்டது. இதனால் வலி பொறுக்க முடியாமல் தவித்துள்ளார். அவரை அவரது பெற்றோர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் தஞ்சையில் தனியார் மருத்துவமனைக்கு பரத்தை அழைத்து சென்றனர். அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கை குறைந்துவிட்டது.
அவருக்கு குறைந்த ரத்த அழுத்தமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரது உடல் தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைக்காது என தெரிவித்துவிட்டனர். இதையடுத்து பரத் தஞ்சை மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் டாட்டூ குத்திக் கொண்ட மற்ற நண்பர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம் இருந்தால் பச்சை குத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அது போல் பச்சை குத்துவோரும், பச்சை குத்திக் கொள்வோரும் எந்த தோல் நோயும் இல்லாதவராக இருத்தல் வேண்டும். பச்சை குத்துவோர், குத்திக் கொள்ள வருவோருக்கு தோல் வியாதி இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துதான் குத்திவிட வேண்டும்.
சுத்தமாக இருக்கும் இடத்தில்தான் பச்சை குத்தும் பணிகளை செய்ய வேண்டும். காற்றில் தூசி, நோய் தொற்றுகள் பரவி பச்சை குத்தும் துளையின் வழியாக உடலுக்குள் சென்றுவிடுகிறது. இதனால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு பயன்படுத்தக் கூடிய டையானது ஒரு சிலருக்கு ஒவ்வாமையை கொடுக்கும். டை அந்த நபருக்கு ஒப்புக் கொள்ள கூடியதா என்பதை பார்த்துவிட்டுதான் பச்சை குத்த தொடங்க வேண்டும்.
அதிக சதை பகுதி உள்ள இடத்தில்தான் பச்சை குத்த வேண்டும். நிறைய பேர் கழுத்து பகுதியில் குத்திக் கொள்கிறார்கள். அது தவறு. கழுத்து பகுதியில் மூளைக்கு செல்லக் கூடிய பெரும்தமனி, சிரைகள், ரத்தக் குழாய்கள், நரம்புகள் எல்லாம் உள்ளன. ஒரு வேளை ரத்தக் குழாயில் குத்திவிட்டால் இவர்கள் குத்தும் டையே நேரடியாக உள்ளே சென்று உடல் உபாதையை கொடுக்க தொடங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், இணை நோய் உள்ளவர்கள், நாள்பட்ட வியாதி உள்ளவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பச்சை குத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கழுத்து பகுதியில் மூளைக்கான நரம்புகள் உள்ளன. இதனால் நேரடியாக மூளையை பாதிக்கும். ஒரு முறை நரம்பில் காயம் ஏற்பட்டுவிட்டால் அந்த நரம்பு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் உறுப்புகளை செயலிழக்கும்.
விலை குறைவான ஊசியை திரும்ப திரும்ப பயன்படுத்துவதால் எச்ஐவி, ஹெபடைட்டிஸ் பி பரவ வாய்ப்பிருக்கிறது. நல்ல சுத்தமான ஊசியை பயன்படுத்துவது நல்லது. டாட்டூ குத்தியதும் உடனே அலர்ஜி ஏற்படலாம், இல்லாவிட்டால் தாமதமாகவும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் நிறைய நோய்கள் பரவும். பெரிய நரம்புகள், தண்டுவட பகுதிகளில் ஊசியால் குத்திவிட்டால் அங்கு செல்லும் டையால் ரத்தம் உறைந்து உயிரிழப்பை கொடுக்கும். கேன்சர் வரும் வாய்ப்பும் இருக்கிறது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.