அமெரிக்கா, ஐரோப்பிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் காரணத்தால் புதிய முதலீட்டுகளை ஈர்க்க முடியாமல் பல முன்னணி நிறுவனங்கள் மாட்டிக்கொண்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பணிநீக்கம் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் ஆரம்பகட்டமாக 2022 ஆம் ஆண்டு முழுவதும் Edtech நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் 2023 ஆம் ஆண்டு துவக்கம் அனைத்து துறைகளின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்ய துவங்கியது. இந்த வரிசையில் முன்னணி யூனிகார்ன் நிறுவனமும், போதுமான நிதி ஆதாரங்களை கொண்டு இருக்கும் வேளையிலும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
ரீசெல்லர் ஈ-காமர்ஸ் யூனிகார்ன் நிறுவனமான மீஷோ ஒரு வருடத்தில் அதன் இரண்டாவது சுற்று பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி சுமார் 251 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதார மீஷோ தெரிவித்துள்ளது. இதுமூலம் ஒட்டுமொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீத ஊழியர்களை இந்த சுற்றில் பணிநீக்கம் செய்கிறது.
மீஷோ நிறுனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விடித் ஆத்ரே தனது ஊழியர்களுக்கு மே 5 தேதி அனுப்பிய மின்னஞ்சலில் சவாலான மேக்ரோ பொருளாதார சூழல்நிலையை காரணம் காட்டி, பணிநீக்கம் செய்யப்படுவதாக ஊழியர்களுக்கு விளக்கம் கொடுத்து உள்ளார்.
இந்திய முதலீட்டு சந்தையில் தற்போது நிலவும் கடினமான நிதியியல் சூழலில் பணிநீக்கம் செய்த முதல் சில நியூ ஏஜ் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது மீஷோ, அதிலும் குறிப்பாக ஈகாமர்ஸ் துறையில் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் முதன்மையான நிறுவனமாக உள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயக்கும் மீஷோ நிறுவனம், கடந்த ஆண்டு அதன் மளிகைப் பொருட்கள் டெலிவரி பிரிவில் இருந்து 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மளிகைப் பொருட்கள் டெலிவரி பிரிவு முதலில் ஃபார்மிசோ என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில் சூப்பர் ஸ்டோர் என பெயரிடப்பட்டு உள்ளது. தற்போது மீஷோ நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்படும் 251 ஊழியர்களுக்கு அவரவர் சம்பளம், பதவி ஆகியவற்றை பொருத்து 2.5 மாதம் முதல் 9 மாதம் வரையிலான severance pay அளிக்கப்பட உள்ளது. இதேபோல் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியரிடம் ESOP இருந்தால் இதை வாங்க நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.