பெங்களூரில் அமைகிறது 18 கிலோ மீட்டர் நீள சுரங்கப்பாதை ரோடு! டோல் கட்டணம் ரூ.288

post-img
பெங்களூர்: பெங்களூர் நகரின் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசலை தீர்க்க, ஹெப்பால் முதல் சில்க் போர்டு வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்க வழிச் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சுரங்க வழிச்சாலையில் பயணிக்கும் கார்கள், 18 கி.மீட்டர் தொலைவுக்கு ரூ.288 சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஏராளமான ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று சொல்லக்கூடிய அளவிற்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெங்களூரில் கொட்டிக் கிடக்கின்றன. உலகளாவிய நிறுவனங்கள் பலவும், பெங்களூரில் தங்கள் அலுவலகங்களை நிறுவியுள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும், பெங்களூரில் பணி செய்து வருகின்றனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், பெங்களூரில் அதிக அளவில் குடிபெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக பெங்களூர் நகரம், கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய போக்குவரத்து சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இளைஞர்களின் கனவு நகரமாக மாறிவிட்ட பெங்களூர், டிராஃபிக்கை பொறுத்தவரை அனைவருக்கும் ஒரு கொடுங்கனவாகவே இருக்கிறது. பெங்களூரில் ஏராளமான வாகனங்கள் இயங்கி வருவதால், நாள்தோறும், சாலைகளில் வாகன நெருக்கடி காரணமாக பயணிகள் திக்கித் திணறி வருகின்றனர். தினசரி அலுவலகங்களுக்குச் செல்வோரும் மிக அதிக அளவில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். பெங்களூரின் மிக முக்கியமான பிரச்சனையாக போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இந்நிலையில் தான் ஹெப்பால் மேம்பாலம் முதல் சில்க் போர்டு ஜங்ஷன் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை சுரங்க வழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹெப்பால் மேம்பாலத்தை சில்க் போர்டு சந்திப்புடன் இணைக்கும் வகையில் வடக்கு- தெற்காக 18 கி.மீ. நீளத்திற்கும் கே.ஆர். புரத்தை மைசூர் சாலையுடன் இணைக்க கிழக்கு- மேற்காக 22 கி.மீ. நீளத்திற்கும் சுரங்க வழிச்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அல்டினோக் கன்சல்டிங் என்ஜினியரிங் தயாரித்த சுரங்கப்பாதைக்கான விரிவான பெங்களூர் நகர போக்குவரத்து மேலாண்மை உள்கட்டமைப்பு திட்டத்தின் இறுதி சாத்தியக்கூறு அறிக்கையை Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP) அண்மையில் வெளியிட்டது. அதன்படி, ஹெப்பால் முதல் சில்க் போர்டு வரை வடக்கு- தெற்காக 18 கி.மீ. நீளத்திற்கு சுரங்க வழிச்சாலை அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க வழிச்சாலையில் பிரதானமாக கார்கள் அதிகளவில் பயணிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க வழிச்சாலையின் இடையே சுங்க வரி வசூலிக்கப்படும் என்றும் சாத்தியக்கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கார்களுக்கான சராசரி சுங்கக் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 16 ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது. அதாவது, மொத்த தூரமான 18 கி.மீக்கு ரூபாய் 288. இந்த சுரங்க வழிச்சாலையில் 2031ஆம் ஆண்டுக்குள் சுமார் 83,000 கார்களும், 2041ஆம் ஆண்டுக்குள் 97,000 கார்களும் பீக் ஹவர்ஸில் பயணிக்கும் என்று இந்த சாத்தியக்கூறு ஆய்வு தெரிவித்துள்ளது. எனவே, அதனைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து மேம்பட வேண்டுமானால், சுங்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இந்த டோல் கட்டணம் 118 கி.மீ நீளம் கொண்ட 10 வழிச்சாலையான பெங்களூர் -மைசூர் விரைவுச் சாலைக்கான சுங்கக் கட்டணத்தை விட அதிகமாக உள்ளது. பெங்களூர் மைசூர் எக்ஸ்பிரஸ்வேயில், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்புகள் ஒரு பயணத்திற்கு ரூபாய் 170 மற்றும் ரூபாய் 255 செலுத்த வேண்டும். இந்த 22 கி.மீ சுரங்கவழிச்சாலை டோல் கட்டணம் அதைவிட அதிகமாக உள்ளது. சாத்தியக்கூறு அறிக்கையின்படி, ஹெப்பால் எஸ்டீம் மால் ஜங்ஷன் முதல் சில்க் போர்டு கேஎஸ்ஆர்பி சந்திப்பு வரையிலான வடக்கு- தெற்கு வழித்தடமானது, பிரதான சுரங்கப்பாதையில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வளைவுகள் வழியாக மூன்று இடைநிலை இடங்களை இணைக்கும் சுரங்கப்பாதையாக உருவாக்கப்பட உள்ளது. இந்த சுரங்க வழிச்சாலை அமைக்கப்பட்டால், பயண நேரம் சுமார் 90 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்களாக குறைக்கப்படும். இந்த சுரங்க வழிச்சாலையின் மொத்த செலவு சுமார் 15,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சில்க் போர்டில் இருந்து ஹெப்பால் வழியாக கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் 58 கி.மீ மெட்ரோ பாதைக்கான திட்டம் ஏற்கனவே இருக்கும் நிலையில், இந்த வடக்கு-தெற்கு சுரங்கப்பாதை பாதை திட்டம் பரிசீலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Post