பண்ருட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால் அமைச்சர்கள் கால்வைக்க முடியாது- மிரட்டும் வேல்முருகன்

post-img
சென்னை: தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பண்ருட்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றால் திமுக அமைச்சர்கள் தொகுதிக்குள் கால் வைக்கவே முடியாது; மக்கள் விரட்டியடிப்பார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னர் பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக அமைச்சர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்; அதேபோன்ற நிலைமைதான் பண்ருட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் உருவாகும், என்றும் வேல்முருகன் எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்துள்ளார். திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானவர் வேல்முருகன். ஆனால் கடந்த சில வாரங்களாக ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் வேல்முருகன். தமிழ்நாடு சட்டசபையிலேயே அரசை பகிரங்கமாக விமர்சித்தார் வேல்முருகன். இது சபைக் குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது. மேலும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ2,000 நிவரணத் தொகையை அரசு அறிவித்ததையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் வேல்முருகன். சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ6,000 தருகிற அரசு ஏன் கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களை வஞ்சிக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார் வேல்முருகன். இந்த நிலையில் வேல்முருகன் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. திமுக அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்வார் எனவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில், தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் பண்ருட்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்; அந்த தேர்தலின் போது பண்ருட்டி தொகுதிக்குள் எந்த அமைச்சரும் நுழைய முடியாது. முன்னர் பென்னாகரம் இடைத் தேர்தலில் திமுக அமைச்சர்களை மக்கள் விரட்டியடித்தனர் அதேபோல பண்ருட்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றால் அங்கேயும் அமைச்சர்களை மக்கள் விரட்டியடிப்பர்; தொகுதிக்கு ஒரு கல்லூரிக்கு கூட அனுமதி தராத அரசை மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றார் வேல்முருகன்.

Related Post