ராய்ப்பூர்: சடலத்துடன் செக்ஸ் வைத்து கொண்டு குறித்த வழக்கு ஒன்று சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. இதில், சடலத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்து மாவட்டத்தில், உள்ளூர் காவல் நிலையத்தில் 9 வயது மதிக்கத்தக்க தலித் சிறுமியை காணவில்லை என்று புகார் பதிவாகியிருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. நீண்ட தேடுதலுக்கு பிறகு அருகில் இருந்த ஆள் நடமாட்டம் அற்ற காட்டு பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மட்டுமல்லாது சிறுமி கொல்லப்பட்ட பின்னரும் சடலத்துடன் யாரோ உடலுறவில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணையில் நீல்சந்த் என்பவரை போலீஸ் கைது செய்தது. அவரை தொடர்ந்து, நீல்காந்த் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொல்லப்பட்ட சிறுமி, நீல்சந்த் வீட்டில் அருகில் வசித்து வந்திருந்தார். சிறுமியின் பெற்றோர்கள் இல்லாத நேரமாக பார்த்து, நீல்சந்த் அவரது வீடு புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி இதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கத்த முயன்றுள்ளார். ஆனால், சத்தம் போடக்கூடாது என்று கூறி சிறுமியை பலமாக தாக்கி, அவரை நீல்சந்த் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது நண்பர் நீல்காந்த் என்பவரின் உதவியுடன் சடலத்தை ஆள் நடமாட்டம் அற்ற காட்டு பகுதிக்கு எடுத்து சென்றிருக்கிறார்.
அங்கு இருவரும் சேர்ந்து குழியை வெட்டி சிறுமியின் சடலத்தை போட்டிருக்கின்றனர். அப்போது நீல்காந்த் சிறுமியின் சடலத்துடன் உடலுறவு கொண்டிருக்கிறார். இது அனைத்தும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இருவர் மீதும் கொலை, குற்றத்தை மறைத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீல்காந்த் விசாரணை நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
நீதிமன்றமும் வழக்கை விசாரித்து, போக்சோ குற்றத்திலிருந்து அவரை விடுவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்லப்பட்ட சிறுமியின் தாய் சார்பில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எதிர் தரப்பில் உயிரிழந்த சிறுமியின் தாய், போக்சோ வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இரண்டு வழக்குகளின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், சடலத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக வராது என்று கூறியுள்ளனர்.
மேலும், "ஐபிசியின் 363, 376 (3) பிரிவுகள், போக்சோ சட்டத்தின் பிரிவு 6, 2012 மற்றும் 1989 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 3(2)(v) ஆகியவற்றின் கீழ் இது போக்சோ அல்லது கற்பழிப்பு குற்றத்தின் கீழ் வராது. சடலத்துடன் செக்ஸ் வைத்துக்கொள்வது நெக்ரோபிலியா என்று குறிப்பிடப்படுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றம் என்றால் அதனால் பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருந்திருக்க வேண்டும். வன்கொடுமைக்கு பிறகு கொலை செய்வது என்பது தனி வழக்கு, ஆனால் சடலத்துடன் செக்ஸ் என்பது வன்கொடுமை குற்றமாகாது" என்று கூறியுள்ளனர்.
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு தளங்களில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.