பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தந்தை..ராணுவ உடையில் மரியாதை செலுத்திய 6 வயது மகன்

post-img

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த ராணுவ அதிகாரியான தனது தந்தையின் உடலுக்கு 6 வயது மகன் ராணுவ சீருடை போன்ற உடையை அணிந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அமைதி நிலவி வருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோகோரெனாக் பகுதியில் கடந்த 12ம் தேதியன்று இரவு திடீரென்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூட்டில் ஈடுபட தொடங்கினர். இந்த தாக்குதலை எதிர்பாராத பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.


இருப்பினும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மன்ப்ரீத் சிங், மேஜர் ஆசிஸ் தான்சக் ஆகியோர் மீதும், ஜம்மு-காஷ்மீர் டி.எஸ்.பி ஹூமாயுன் பட் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது ராணுவ வட்டாரத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. எனவே பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதலில் குதித்துள்ளனர்.


மறுபுறம் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. இதில் சோகம் என்னவெனில் டிஎஸ்பி ஹுமாயுனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது. அவருக்கு 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அதேபோல கர்னல் மன்ப்ரீத் சிங்கின் உடல் அவரது சொந்த ஊரான பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இவருக்கு 6 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கர்னல் மன்ப்ரீத் மூன்றாவது தலைமுறையாக ராணுவத்திற்கு சேவை செய்து வருகிறார். இதற்கு முன்னர் அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படி இருக்கையில் இறுதி ஊர்வலத்தில் இவரது 6 வயது மகன், ராணுவ சீருடை போன்ற உடையை அணிந்துக்கொண்டு தனது தந்தைக்கு சல்யூட் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Related Post