எகிப்து அதிபரின் அழைப்பை ஏற்று இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு செல்கிறார். 1997- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து செல்வது இதுதான் முதல் தடவையாகும்.
வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனும், அவருடைய மனைவி ஜில் பைடனும் மோடிக்கு சிறப்பு விருந்து அளித்தனர். ஜில் பைடன் ஏற்பாட்டில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார். அதுமட்டும் இன்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் தனிப்பட்ட முறையில் இரவு விருந்து அளித்து கவுரவித்தனர்.
இதே போன்று அமெரிக்க அரசின் சார்பில், பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் இரவு விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு உரையாற்றினார். தொடர்ந்து வாஷிங்டன்னில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பின்னர் மூன்று நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி எகிப்து புறப்பட்டு சென்றார். எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபதாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. 1997- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து செல்வது இதுதான் முதல் தடவையாகும். பிரதமர் மோடி எகிப்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.