சென்னை: இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இலங்கை ராணுவத்தால் தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது - அவ்வாறு கைது செய்யப்படும் போது தாக்குதல் நடத்துவது - படகுகளை பறிமுதல் செய்து நிரந்தரமாக முடக்கி வைப்பது எல்லாம் மீனவர்களை சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்தி - அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியிருப்பதையும் - கைது செய்யப்படும் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் கடும் சிறைத் தண்டனை - அபராதம் உள்ளிட்டவை இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்கு அடையாளமாகத் தெரியவில்லை எனவும் இச்செயற்குழு கவலை தெரிவிக்கிறது.
பிரதமரை சந்திக்கும் நேரங்களிலும் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதங்கள் வாயிலாகவும் முதலமைச்சர், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும், இலங்கை ராணுவம் மீனவர்களை கைது செய்வதை தடுத்து நிறுத்தி- கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனே மீட்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை இச்செயற்குழு பாராட்டுகிறது.
திராவிட மாடல் அரசின் இவ்வாறான தொடர் அழுத்தத்தின் விளைவாக - கடந்த 16.12.2024 அன்று டெல்லி வந்த இலங்கை அதிபர், இந்தியப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியான கூட்டறிக்கையில் “மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகவும்” “மீனவர்கள் தாக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவும்” “ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும்” இலங்கையின் புதிய அதிபர் தனது முதல் பயணத்தின்போதே ஒப்புக்கொண்டிருப்பதை - மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான ஒரு நல்ல துவக்கமாக இந்த செயற்குழு கருதுகிறது.
இதை முன்னெடுத்துச் செல்லும் வகையில், “இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவித்து - பறிமுதல் செய்த படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என்று முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை இச்செயற்குழுவும் வழிமொழிந்து - முதலமைச்சரின் ஆலோசனையை உரிய முறையில் ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் தெரிவித்து - “இந்தியப் பிரதமர்- இலங்கை அதிபர்” ஆகியோரின் பேச்சுவார்த்தையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ஏதுவாக - தமிழ்நாடு மீனவர்களை, படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் - தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை விரைந்து காணவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.