இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் மையங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாலிபான் மீதான இந்த தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டித்து உள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ளது போலவே பாகிஸ்தானில் தாலிபான் அமைப்பு உள்ளது. இந்த தாலிபான் அமைப்பின் ரகசிய தாங்கும் இடங்கள், தளவாடகங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளது.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்று பாகிஸ்தானின் தலிபான்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும் - இவர்களுக்கும் ஆகாது. பாகிஸ்தான் ராணுவத்திரும் இவர்களுக்கும் கூட மோதல் உள்ளது.
பாகிஸ்தானில் தலிபான் ஆட்சியை நிறுவ வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். அதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகத் தாக்கி, அரசியல்வாதிகளைக் கொன்று பாகிஸ்தானை சீர்குலைக்கும் பணியே டிடிபி அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தாக்குதல் நடத்துவதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இவர்களுக்கு சொந்தமான தளவாடங்களில் திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான் கண்டனம்: தாலிபான் மீதான இந்த தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டித்து உள்ளது.
பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலைக் கண்டித்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம், இஸ்லாமிய எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் மீதான இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள், பெண்கள், குடும்பங்களை குறி வைத்து தாக்கி உள்ளனர். இது மிருகத்தனமான தாக்குதல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாகாது.
இதை ஆப்கானிஸ்தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க மாட்டோம். இந்த கோழைத்தனமான செயலுக்கு பதிலடி கொடுப்போம். எங்கள் பகுதிகளை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எங்கள் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதற்கு உரிய பதிலடி தருவோம் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தாக்குதல் விவரம்: ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தளவாட பகுதி என்று கருதப்படும் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு நடந்த இந்த தாக்குதல்களில் லாமன் உட்பட ஏழு கிராமங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜெட் விமானங்களே காரணம் என்று அந்நாட்டு அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பர்மாலில் உள்ள முர்க் பஜார் கிராமம் இந்த தாக்குதலில் கடுமையாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
வான்வழித் தாக்குதல்கள் காரணமாக 15 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்தன, பலர் கடுமையாக காயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கும் பட்சத்தில் அது இரண்டு நாட்டு மோதலாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன.