இந்தா வந்துட்டாங்கல்ல என் செல்லங்கள்.. கிறிஸ்துமஸுக்கு வண்டியை விட்ட மக்கள்! செங்கல்பட்டே திணறுது!

post-img
செங்கல்பட்டு: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் மக்களால் செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே இருங்குன்றம் பள்ளி பகுதியில் உள்ள பாலாற்று பாலத்தில் உள்ள பள்ளங்களால் வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து போலீசார் களமிறங்கியுள்ளனர். இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதத்தின் தொடக்கம் முதலே மக்கள் தங்கள் வீடுகளில் முகப்புகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை: மேலும், இதற்காக மிகப் பெரிய அளவிலான கேக் வகைகள் மற்றும் வீடு தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள், வண்ண வண்ண அலங்கார நட்சத்திரங்களை தொங்க விட்டும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு இன்னும் ஒரு சில வாரங்களில் உள்ள நிலையில் கடைகளில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது. தென் மாவட்ட மக்கள்: வரும் புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் வார இறுதி நாளான இன்றிலிருந்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் பயணிக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து கார்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் அதிக அளவு மக்கள் பயணித்து வருகின்றனர். தொடர் விடுமுறை: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தாலும் பரவாயில்லை என திங்கள், செவ்வாயை பொருட்படுத்தாமல் சனிக்கிழமையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு நெரிசல்: இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே இருங்குன்றம் பள்ளி பகுதியில் உள்ள பாலாற்று பாலத்தில் உள்ள பள்ளங்களால் வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஏராளமான வாகனங்களின் வருகையால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. அணிவகுக்கும் வாகனங்கள்: பாலாற்று பாலம் முதல் பழவேலி வரை சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் மக்கள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர். வழக்கமாக பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக்காக சென்னையிலிருந்து அதிக அளவில் மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி பயணம் மேற்கொள்வார்கள். மேம்பால பணிகள்: தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை பணிகளும் மேம்பால பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவே இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. மேலும் புத்தாண்டு வரும் நிலையில் அடுத்த வாரமும் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதற்கடுத்து 15 நாட்களில் பொங்கல் பண்டிகையும் வர இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை திணறுவது உறுதி. எனவே மேம்பாலப் பணிகளையும் சாலை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Related Post