கடலூர்: கடலூரில் பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோதே ஆசிரியரை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீப காலமாக பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவது, பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி அதிர்ச்சியளிக்கின்றன.
இந்த நிலையில் கடலூரில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூரில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதில் மாணவி கர்ப்பமாகி ஆண் குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த மாமங்கலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியராக மலர்செல்வம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு இவரது வகுப்பில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
தற்போது அந்த மாணவி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அப்போது மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மாணவியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி மாணவியிடம் விசாரித்த போது தான் பள்ளியில் வேதியியல் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி வகுப்பறைக்குள் வந்தே போலீசார் அவரை கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், பள்ளி மாணவியை ஆய்வுக்கூடத்தில் வைத்து பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும், மீறி சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்துவிடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று வேறு மாணவிகள் யாருக்கும் இவர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? வேறு எந்த மாணவியும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் விசாரித்து வருகிறார்கள்.