சந்திரயான் 3 விண்கலத்தின் உந்து விசையிலிருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் திட்டத்தின் படி சென்று கொண்டு இருக்கும் சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி இன்று மதியம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதனைத்தொடர்ந்து புவிசுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் கடந்த 5ஆம் தேதி விண்கலம் நுழைந்தது.
நேற்று இறுதி சுற்றுவட்டப் பாதையில் உயரம் வெற்றிக்கரமாக குறைக்கப்பட்டு சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவில் விண்கலம் பயணித்துகொண்டிருந்தது.
இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் உந்து விசையிலிருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. விண்கலத்தில் இருந்து லேண்டரை பிரிக்கும் பணி பெங்களூருவில் இஸ்ரோ மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. சரியாக 1.15 மணிக்கு உந்து சக்தி கலனில் இருந்து பிரிந்தது விக்ரம் லேண்டர். இந்த லேண்டரின் சுற்றுவட்ட பாதை நாளை குறைக்கப்படும். தொடர்ந்து லேண்டர் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.