வேலூர்: வேலூரில் பாஜக பிரமுகர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை அடையாளம் தெரியாத நபர்கள் தலையில் அடித்து கொலை செய்துவிட்டதாகவும், போலீசார் கொலையை மறைக்க முயல்வதாகவும் அவரது மனைவி போலீசில் குற்றம்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்டத்தின் கேவி குப்பம் மேற்கு ஒன்றிய மாவட்ட கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளராக விட்டல்குமார் பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கும் அதே ஊரில் வசித்து வரும் வேறு சிலருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்திருக்கிறது. இது பகையாக வளர்ந்து முன் விரோதமாக முற்றியிருக்கிறது. முன் விரோதம் எப்போது வேண்டுமானாலும் விட்டல் குமார் மீதான தாக்குதலாக வெடிக்க கூடும் என்கிற நிலைமை இருந்து வந்திருக்கிறது.
இப்படி இருக்கையில்தான் நேற்று மாலை சென்னாங்குப்பம் எனும் பகுதியில் விட்டல் குமார் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். காயங்களை வைத்து பார்க்கும்போது அவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நிச்சயம் இது விபத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல என்றும் விட்டல் குமாரின் மனைவி ரேவதி கூறியுள்ளார்.
தனது கணவரின் சடலத்தை கைப்பறியது தொடங்கி, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியது வரை போலீசார் அலட்சியமாக இருந்து வருகின்றனர் என்றும், இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கட்சியின் தலைமைக்கும் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து விட்டல் குமாரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு முன்பு திரண்ட பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்டோர், விட்டல் குமார் வழக்கில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கூறி கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விட்டல் குமார் இறந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அதன் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. பாஜக பிரமுகரின் மரணம் குறித்து காவல்துறையை விமர்சித்து அடுக்கம்பாறையில் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் வேலூரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.