பெங்களூர்: கர்நாடகா மேல்சபையில் பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் நடத்தையை விமர்சிக்கும் வகையில் இழிவான வார்த்தைகளால் விமர்சனம் செய்த தமிழக முன்னாள் பாஜக மேலிட பொறுப்பாளரும், கர்நாடகா எம்எல்சியுமான சிடி ரவியை போலீசார் சட்டசபை வளாகத்தில் நுழைந்து குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்நிலையில் தான் லட்சுமி ஹெப்பால்கரை நோக்கி, சிடி ரவி என்ன சொன்னார்? கர்நாடகா மேலவையில் ஏற்பட்ட களேபரத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போது நாடு முழுவதும் பரபரப்பான விஷயம் என்றால் அது அமித்ஷா விவகாரம். தான் அதாவது நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் அமித்ஷா சமீபத்தில் பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் இடையூறு செய்தன. இந்த வேளையில் அமித்ஷா கூறிய வார்த்தை தான் சர்ச்சையை கிளப்பி பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது அமித்ஷா, ‛‛எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்" என்று கூறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதோடு அம்பேத்கரை இழிவுப்படுத்திய அமித்ஷா மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தில் பாஜக எம்பிக்கள் 2 பேரின் மண்டைகள் உடைந்தன. ராகுல் காந்தி தான் அவர்களை தள்ளிவிட்டதாக பாஜக புகார் அளித்தது. ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் 2 பாஜக எம்பிக்களின் மண்டை உடைந்தது போல் கர்நாடகா சட்டசபையிலும் பாஜக எம்எல்சி சிடி ரவியின் மண்டை உடைந்தது. இந்த சிடி ரவி யார் என்றால் தமிழக பாஜக முன்னாள் மேலிட பொறுப்பாளர். அதோடு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என்றும், அண்ணாமலையின் குரு என்றும் சொல்லப்படுவர். கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் சிக்கமகளூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் மேலவை உறுப்பினர் அதாவது எம்எல்சியாக உள்ளார்.
இந்த பதவி நம் தமிழகத்தில் கிடையாது. ஆனால் கர்நாடகாவில் உண்டு. அதாவது நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா போன்று 2 சபைகள் இருப்பது போல் கர்நாடகாவிலும் 2 சபைகள் உள்ளன. ஒன்று சட்டசபை. இங்கு எம்எல்ஏக்கள் இருப்பார்கள். இன்னொன்று சட்ட மேலவை. இங்கு தான் எம்எல்சிக்கள் இருப்பார்கள். அந்த வகையில் தான் சிடி ரவி எம்எல்சியாக உள்ளார். தற்போது கர்நாடகாவில் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நடந்து வருகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் பெங்களூர் விதான சவுதாவிலும், கடைசி கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவிலும் நடக்கும்.
வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இப்படி மாறிமாறி சட்டசபை கூட்டத்தொடர் என்பது நடக்கும். நேற்றைய தினம் மேலவை கூடியதும் அரசியலமைப்பு தொடர்பான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்சிக்கள் இடையே அம்பேத்கர் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அமித்ஷா பற்றி காங்கிரஸ் தலைவர்கள் பேசினார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அம்பேத்கரை அமித்ஷா இழிவுப்படுத்தியதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய நிலையில், காங்கிரஸ் தான் தொடர்ந்து அம்பேத்கரை இழிவுப்படுத்தி வருவதாக பாஜகவினர் கூறினர். தொடர் அமளியால் சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி சபையை ஒத்திவைத்தார்.
அதன்பிறகு திடீரென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் (பெலகாவி புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ) மற்றும் பாஜக எம்எல்சி சிடி ரவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிடி ரவி தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி லட்சுமி ஹெப்பால்கரை விமர்சனம் செய்தார். அதாவது லட்சுமி ஹெப்பால்கரின் நடத்தை மற்றும் கற்பை குறை கூறும் கடுஞ்சொல்லை சிடி ரவி தனது வாயில் இருந்து உதிர்த்ததாக கூறப்படுகிறது.
அதை கேட்டதும் லட்சுமி ஹெப்பால்கர் கண் கலங்கிய லட்சுமி ஹெப்பால் ஆத்திரத்தில் ஒருமையில் பேசினார். ‛‛நீயும் அம்மா, அக்காள், தங்கையுடன் பிறந்தவர் தானே'' என்று ஆத்திரத்தில் கூறினார். அதேபோல் காங்கிரஸ் உறுப்பினர்கள், மானம் இல்லையா, மரியாதை இல்லையா. ஒரு பெண் அமைச்சவை பார்த்து இப்படியா பேசுவது என்று கொதித்தனர். அதை கேட்ட சிடி ரவி, ‛‛இது திசைதிருப்பும் முயற்சி. நான் தனிப்பட்ட ரீதியிலும், மோசமான வார்த்தைகளையும் கூறவில்லை'' என்றார்.
இதையடுத்து லட்சுமி ஹெப்பால்கர் சார்பில் சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மற்றும் பாகேவாடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதோடு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர்டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் இந்த பிரச்சனையை மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டனர். சிடி ரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம் வலியுறுத்தினர். மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறினார். அதன்படி லட்சுமி ஹெப்பால்கர் வழங்கிய புகாரை தொடர்ந்து காவல்துறையினர் பிஎன்எஸ் சட்ட பிரிவு 75 (பாலியல் தொல்லை) மற்றும் 79 (பெண்ணின் நடத்தையை அவமதிப்பது) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
மேலும் சுவர்ண சவுதாவுக்கு வந்த போலீசார் மாலையில் சிடி ரவியை கைது செய்தனர். இந்த சுவர்ணா சவுதா என்பது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. அது அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சொந்த மாவட்டம் என்பதால் கைது நடவடிக்கையின்போது அவரது ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர். போலீசார் சிடி ரவியை அழைத்து சென்றபோது லட்சுமி ஹெப்பால்கரின் ஆதரவாளர்கள் அவரை தாக்க முயன்றனர். போலீசார் பாதுகாப்பாக சிடி ரவியை அழைத்து சென்றனர்.
இருப்பினும் சிடி ரவி காயமடைந்தார். அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. தற்போது பெண்களுக்கு எதிரான செயல்களில் பாஜகவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மணிப்பூரில் பாஜக ஆட்சியில் ஏற்பட்டு வரும் வன்முறையில் கடந்த ஆண்டு 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டனர். வீடியோ வெளியாகும் வரை அதில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது பாஜகவின் பெண்களுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இப்படியான சூழலில் தற்போது பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் நடத்தையை கேள்விக்குறியாக்கும் வகையில் சிடி ரவி உதிர்த்தாக கூறப்படும் வார்த்தை கர்நாடகாவில் களேபரத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனாலும் தற்போது வரை பாஜக சார்பில் சிடி ரவியை யாரும் கண்டிக்கவில்லை. மாறாக சிடி ரவியை கொல்ல சதி நடந்துள்ளது என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றன. பொதுவாக சாமானியனாக இருந்தாலும் சரி, சக்தி படைத்த அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் சரி. பொதுவெளியில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் சொல்லும் வார்த்தைகளில் அதிக கவனம் இருக்க வேண்டும். ஒரு சொல்லை சொல்வதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். இப்படியான சூழலில் சிடி ரவியோ கர்நாடகாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர்.
கடந்த 2004, 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் சிக்கமகளூர் சட்டசபை தொகுதியில் தொடர்ச்சியாக பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எடியூரப்பா அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக செயல்பட்டவர். அதோடு பாஜக மேலிடத்துக்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு பாஜகவில் தேசிய பொதுச்செயலாளர் 2020 முதல் 2023ம் ஆண்டு வரை செயல்பட்டார்.
இந்த காலக்கட்டத்தில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக செயல்பட்டார். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும் தற்போது எம்எல்சியாக செயல்பட்டு வருகிறார். இப்படி மூத்த அரசியல்வாதியாக இருந்து கொண்டு பெண் அமைச்சரவை தரக்குறைவாக பேசி போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது பற்றி சிடி ரவியே தனக்கு தானே கேள்வி கேட்டு கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.