சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையின் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள், அங்கிருந்து அகற்றப்பட்டு,நொச்சிக்குப்பம் நவீன மீன் அங்காடிக்கு மாற்றப்பட்டது. தற்போது பட்டினப்பாக்கம் லூப் சாலை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட உள்ளது. இதற்கு சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்டிருக்கிறது. டெண்டர் கோரும் நிறுவனங்கள் நாளை மாலை 3 மணிக்குள் டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையின் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் சாந்தோம் சாலை குறுகிய சாலை என்பதால் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள பிரதான சாலை ஒரு வழிப்பாதையாக மாறியது. இதன் காரணமாக சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை செல்லும் வாகனங்கள், லூப் சாலை வழியாக ஒருவழி பாதையில் திருப்பிவிடப்பட்டன. ஏற்கனவே மீன் கடைகள் அங்கு இருந்த காரணத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒரு கட்டத்தில் கடைகளையும் அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, நொச்சிக்குப்பபத்தில் நவீன மீன் அங்காடி கட்டித்தர ஒப்புக்கொண்டது. அதன்படியே நவீனமீன் அங்காடியை அரசு கட்டித்தந்த நிலையில், கலங்கரைவிளக்கம் வளைவு திரும்பி லூப் சாலை வழியாக ஒருவழி பாதையில் வாகனங்கள் சென்றுவருகின்றன. அதேநேரம், பட்டினப்பாக்கம் லூப் சாலை கடைகள் அமைக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பட்டினப்பாக்கம் லூப் சாலை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மறுசீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ரூ.17 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெண்டர் கோரும் நிறுவனங்கள் நாளை மாலை 3 மணிக்குள் டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையை மேலும் மக்கள் பயன்படும் வகையில் மறுசீரமைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாதுகாப்பாக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி, கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை குறித்து விரிவாக அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.
இந்த பகுதியில் மீனவ மக்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் வசதிகள் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. நகர்ப்புற வாழ்விடத்துக்கு ஏற்றவாறு மறுசீரமைப்பு செய்ய சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும். முதற்கட்டமாக தற்போது ஆய்வுகள் மற்றும் கருத்துகள் கேட்கும் பணிகள் மட்டுமே நடைபெறும் என்று கூறினர்.