ஹைதராபாத்: தெலுங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) (BRS) கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான வெமுலவாடா தொகுதி சென்னமேனி ரமேஷ், ஜெர்மன் குடியுரிமை பெற்றுள்ளார் என்பதை உறுதி செய்து தெலுங்கானா உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கில் சென்னமேனி ரமேஷுக்கு ரூ.35 லட்சம் அபராதம் விதித்தும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படாத போது 2013-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் சென்னமேனி ரமேஷ். ஜெர்மன் நாட்டின் குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்டு வென்றது செல்லாது என வழக்கு தொடரப்பட்டது. அப்போது, சென்னமேனி ரமேஷின் வெற்றியை ரத்து செய்து தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் சென்னமேனி ரமேஷ், இந்த உத்தரவுக்கு தடை பெற்றார்.
உச்சநீதிமன்றம் பிறபித்திருந்த தடை உத்தரவை பயன்படுத்தியே 2014, 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களிலும் பிஆர்எஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார் சென்னமேனி ரமேஷ். 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெமுலவாடா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஆடி சீனிவாஸ், சென்னமேனி ரமேஷுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது ஜெர்மன் குடியுரிமையை ரத்து செய்ததாக் கூறும் ரமேஷ், அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் போட்டியிட்டது சட்டவிரோதம் என குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தார் ஆடி சீனிவாஸ்.
இந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம், சென்னமேனி ரமேஷ் ஜெர்மன் குடிமகன்தான்; அவர் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் சென்னமேனி ரமேஷுக்கு ரூ35 லட்சம் அபராதம் விதித்தும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ரூ.25 லட்சத்தை ஆடி சீனிவாஸுக்கு தர வேண்டும் எனவும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Weather Data Source: Wettervorhersage 21 tage