கோவை: கோவையில் கடந்த ஓராண்டுக்குப் பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாகத் தொடங்கியது. இரண்டாவது வாரமாக இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்ற நிலையில், தடுப்புகள் சாய்ந்து குழந்தைகள், பெண்கள் சிலர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மக்களை குஷிப்படுத்தும் வகையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஓராண்டாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிகழ்ச்சி கோவை மாநகரில் வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும்.
ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் 90s கிட்ஸ்களின் பம்பரம், சாக்குப் போட்டி, கோலி, பரமபதம், டயர் ஓட்டுதல், லெமன் இன் தி ஸ்பூன் உள்ளிட்ட விளையாட்டுகள், ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகள், குழு நடனங்கள், பள்ளி குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதனால், இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. கடந்த ஓராண்டாக ஹாப்பி ஸ்ட்ரீட் நடத்தப்படாமல் இருந்த நிலையில், கடந்த வாரத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது மீண்டும் கோவையில் துவங்கியது.
கோவை, ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகமாக ஃபிட்னஸ் தொடர்பான நடனங்களில் பலரும் பங்கேற்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கைகளில் வண்ணத்துப்பூச்சி, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான கலர் டாட்டூக்கள் வரையப்பட்டன.
இந்நிலையில், இரண்டாவது வாரமாக இன்று நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் தடுப்புகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகப்படியான மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் டி.பி.சாலையே ஸ்தம்பித்தது. பொதுமக்கள் கூட்டம் காரணமாக இந்த வாரம் அதிகப்படியான போலிஸார் மற்றும் பவுன்சர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.
மேடையில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றபோது பொதுமக்கள் பலரும் தடுப்புகளை ஒட்டியவாறு நடனமாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென தடுப்புகள் கீழே சாய்ந்ததில் பொதுமக்கள் சிலர் குழந்தைகளுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனால், சில குழந்தைகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, உடனடியாக போலீஸாரும், பவுன்சர்களும் தடுப்புகளை சரி செய்து பொதுமக்களுக்கு உதவினர். மேலும் பொதுமக்களை தடுப்புகளை ஒட்டியவாறு நிற்க வேண்டாம் என அறிவுறுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Weather Data Source: Wettervorhersage 21 tage