சென்னை: சென்னை உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை புறக்கணிக்க அவசியம் என்ன? என பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 20) தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தார்.
இந்த உணவு திருவிழா டிசம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பார்வையாளர்கள் மதியம் 12.30 முதல் இரவு 8.30 வரை அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி இலவசம். அவரவருக்கு பிடித்த உணவுகளை விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடலாம். உணவுத் திருவிழாவில் 65 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் மூலம் மொத்தம் 35 உணவு அரங்குகள், 7 தயார் நிலை உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு 100 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன.
இங்கு, மதுரை கறிதோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், பள்ளிபாளையம் சிக்கன், சேலம் தட்டுவடை செட், நெல்லை அல்வா உள்ளிட்ட 286 வகையான சைவ, அசைவ உணவுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பு உணவுகளும் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் அந்த மாவட்டஙக்ளைச் சேர்ந்த மக்கள், தங்கள் ஊரின் ஸ்பெஷல் உணவுகளை சென்னையில் உண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
3வது நாளாக நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவை ஆர்வத்துடன் காணவும், ஆசையுடன் உணவு உண்டு மகிழவும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்து உணவுகளை ரசித்து உண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த உணவுத் திருவிழாவில், மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிட கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவை புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலரும் இந்தக் கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.