சென்னை: தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 1,196 நர்சுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நர்சுகளுக்கு பணி நியமன ஆணைகளை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் திருநெல்வேலி மாவட்டம் கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டிடம், ஆவடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் மற்றும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரத்தம் மற்றும் எழும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் போன்றவற்றை அமைச்சர் மா சுப்பிரமணியன் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், " தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடக்கிறது. இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம்.. கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல காப்பகத்திற்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் ரூ.22 கோடி மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதியும், ரூ.13 கோடியில் புதிய நர்சிங் பள்ளியும் அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது" என்றார்.