பதறிய பிரான்ஸ், தென் கொரியா.. மோதும் அமெரிக்கா - பிரிக்ஸ்.. உலக அரசியலே அல்லோகலப்படுதே.. போச்சு

post-img

சென்னை: உலக அளவில் பல நாடுகளில் உள்நாட்டு அரசியல் மோதலும், நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதலும் உச்சம் அடைந்துள்ளது. உலக அரசியல் நாளுக்கு நாள் பரபரப்பின் உச்சத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.
அரசியல் நெருக்கடி காரணமாக பிரான்ஸ் அரசு கவிழ்ந்து உள்ளது. பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் மைக்கேல் பார்னியர் தோல்வி அடைந்ததை அடுத்து, பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. அவர் அதிபர் இம்மானுவேல் மக்ரோனால் நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து உள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியது, வரவு செலவில் முறைகேடுகளை செய்ததாக கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1962-க்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாட்டின் அரசாங்கம் கவிழ்வது இதுவே முதல் முறையாகும்.
தென்கொரியா: சமீபத்தில்தான் தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார்.

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் தோன்றி தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் அறிவித்தார். ஜனநாயக நாடான தென்கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன்பின் அதை அவர் வாபஸ் வாங்கினார்.
அவரின் அவசர நிலை அறிவிப்பிற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாததால் அவசர நிலை திரும்ப பெறப்பட்டது.
பிரிக்ஸ் மோதல்: இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பிரிக்ஸ் நாடுகளுடன் நேரடியாக மோதல் போக்கை டிரம்ப் கடைபிடிக்க தொடங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போஸ்டில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயம் எதையும் உருவாக்க கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது.

அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுவிடலாம். வேறு யாரவது ஏமாளி கிடைத்தால் அவர்களிடம் அவர்கள் போய் வியாபாரம் செய்யட்டும். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது. டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உங்களுக்கு உள்ள உறவையும் துண்டித்துக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளது.
பிரிக்ஸ் நாணயம்; பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு கூட்டத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கும் திட்டத்தில் உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையே இந்த நாணயத்தை மட்டுமே பயன்படுத்தும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும்.
இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இதைத்தான் டிரம்ப் எதிர்த்து உள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் டாலரை கைவிட்டால் அது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்கும். இதைத்தான் தற்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்து உள்ளது.

Related Post