வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோவிலில் கார்த்திகை மகாதீபம்! கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!

post-img

சென்னை: கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோவிலில், கடந்த நவம்பர் 28 முதல் ஜனவரி 14 வரை நந்த பூஜை, கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், முட்டத்துவயல் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுயம்பு லிங்க கோவிலான வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 13ம் தேதி முதல் மார்கழி 30ம் தேதி வரை மகாதீபம் மற்றும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி, வனத்துறை அனுமதியுடன் நடத்தப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பாண்டு பூஜை, தீபம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி கடந்த அக்டோபர் 29ம் தேதி விண்ணப்பித்தும் பரிசீலிக்கப்படவில்லை என்பதால், மனுவை பரிசீலித்து எதிர்காலத்துக்கும் சேர்த்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில், கடந்த நசம்பர் 28 முதல் 2025 ஜனவரி வரை வெள்ளியங்கிரி மலைக் கோவிலில் பூஜை செய்ய செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதியளித்துள்ளதாகவும், காலை 10 மணி முதல் 3 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர, ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது; விலங்குகளை வேட்டையாடக் கூடாது, அவற்றுக்கு தீங்கு இழைக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து மாவட்ட வன அதிகாரி அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில், காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அந்த நேரத்துக்குள் மலையில் ஏறி, இறங்க முடியாது எனவும், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிக்க வேண்டும் எனவும், நியாயமான அளவிலான விளக்கில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Related Post