தேர்தல் நடத்தை வந்தால் சிக்கல்.. பொங்கல் பரிசு + ரூ.1000.. ரேஷன் கடைகளில் இந்த வாரமே டோக்கன்?

post-img
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்தல் விதிகள் அமலுக்கு வரும். இதனால் ஈரோடு கிழக்கு தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக பொங்கல் டோக்கன் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறதாம். ஈரோடு கிழக்கில் மீண்டும் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் இங்கே மீண்டும் இடைத்தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். அங்கே எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலை காலமானார். உடல் உபாதைகள், வயோதிகம் காரணமாக கடந்த சில வாரங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிக மோசமானது. அவரின் உடல்நிலை கடந்த 2 நாட்களாக தீவிரமாக மோசம் அடைய.. அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், எதையும் உள்ளத்திலிருந்து உரைக்கும் ஆற்றல் பெற்ற அருமை நண்பர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்தாரே! நெடிய அரசியல் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரரான அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலில் பேரிழப்பாகும். கனத்த இதயத்துடன் அருமை நண்பருக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினேன், என்று அஞ்சலி செலுத்தி உள்ளார். பொங்கல் டோக்கன்: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்தல் விதிகள் அமலுக்கு வரும். இதனால் ஈரோடு கிழக்கு தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக பொங்கல் டோக்கன் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறதாம். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான டோக்கன் அடுத்த வாரம் இறுதியில் இருந்து.. பெரும்பாலும் 20ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நன்னாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. போன முறை வெல்லம் வழங்கப்படவில்லை. அதேபோல் இந்த முறையும் வழங்கப்படாது. அதற்கு பதிலாக ரூ.1000 பணம் வழங்கப்படும். பொங்கல் பரிசு: மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Post