திண்டுக்கல்: வந்தே பாரத் ரயில் பெட்டியில் திடீரென பயணிகள் டென்ஷனாகிவிட்டார்கள்.. இந்த திடீர் சிக்கலால், கிட்டத்தட்டட ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில்வே ஸ்டேஷன் வந்துள்ளனர்.. என்ன நடந்தது திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில்?
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கான வரவேற்பு அதிகரித்தபடியே உள்ளது. தமிழகத்திலும் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. எனினும், அவ்வப்போது ஏதாவது பரபரப்பு சம்பவங்கள் வந்தே பாரத் ரயில்களில் நடந்துவிடுகின்றன.
4 நாட்களுக்கு முன்புகூட, காட்பாடியில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துவிட்டது. 20643 / 20644 என்ற எண் கொண்ட சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருமார்க்கங்களிலும் நின்று செல்கிறது.
திடீர் புகை: அப்படித்தான், காட்பாடி ரயில் நிலையத்தை தாண்டியதுமே, "C1" பெட்டியில் தானியங்கி கதவுகள் அருகே, திடீரென புகை வெளியேற துவங்கிவிட்டது.. ஸ்லைடிங் கதவுகள் அருகே புகை வருவதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்து, 139 என்ற உதவி எண்ணுக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் தகவல் தந்தனர்.
ரயிலிலிருந்த இன்ஜினியர் மற்றும் கேட்டரிங் அலுவலர் ஆகியோர் விரைந்து புகையை தடுத்து நிறுத்தியபோதும்கூட, ஏசி கோச்சிற்குள் புகை சூழ்ந்து கொண்டது. இதைப்பார்த்து பயணிகள் கதறினார்கள். எனினும், தீவிபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதால், பயணிகளை ரயில்வே அதிகாரிகள், சமாதானம் செய்து, பாதுகாப்பாக அவர்களை அழைத்து வந்தனர்.
வந்தே பாரத் ரயில்: இந்நிலையில்தான், இன்னொரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.. சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் (வண்டி எண் 20665) வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மதியம் 2.50 மணிக்கு, ஏராளமான பயணிகளுடன் சென்னையிலிருந்து நெல்லை நோக்கி புறப்பட்டது.
இரவு 7.45 மணி அளவில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது.. அப்போது ரெயிலில் உள்ள தானியங்கி கதவுகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. கதவுகள் தானாக திறக்கப்பட்டதால், அந்தந்த பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் ஸ்டேஷனில் இறங்கிச்சென்றனர். ஆனால் C4, C5 பெட்டிகளின் கதவுகள் மட்டும் திறக்கப்படவில்லை. இதனால், திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் பயணிகள் ரெயில் பெட்டிக்குள்ளேயே தவித்தபடி நின்றார்கள்.
டிக்கெட் பரிசோதகர்: 5 நிமிடங்களுக்கு மேலாகியும், கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ரெயில் என்ஜின் டிரைவரை தொடர்புகொண்டு பேச முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் திண்டுக்கல் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு நகர தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகளில் ஒருவர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.
எனினும், திண்டுக்கல் ரெயில்வே ஸ்டேஷனை தாண்டி, சில கிலோ மீட்டர் தொலைவில் சென்று பாதி வழியில் ரயில் நின்றது. இதனை கண்ட டிக்கெட் பரிசோதகர், "ஸ்டேஷனைவிட்டு சில கிலோ மீட்டர் தூரம் ரெயில் கடந்து வந்துவிட்டது.. அதனால், கொடைரோடு ரெயில்வே ஸ்டேஷனில் உங்களை இறக்கிவிட்டு, தூத்துக்குடியில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் ரெயிலில் கட்டணமின்றி திண்டுக்கல்லுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்கிறோம்" என்றார்.
ரயில்வே ஸ்டேஷன்: இதையடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். பிறகு இரவு 8.10 மணிக்கு வந்தே பாரத் ரெயில் கொடைரோடு ரெயில்வே ஸ்டேஷனை அடைந்தது. வழக்கமாக இந்த கொடைரோடு ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் எப்போதுமே நிற்காது.. ஆனால், ரெயில் பெட்டியில் சிக்கிய பயணிகளுக்காக மட்டும், ஸ்பெஷலாக, நேற்றைய தினம் நிறுத்தப்பட்டது.
அந்த ஸ்டேஷனில் மொத்தம் 12 பேர் இறங்கினார்கள்.. இதில் ஒரு பெண் மட்டும், கைக்குழந்தையுடன் வாடகை காரில் திண்டுக்கல் சென்றார். மற்ற 11 பயணிகளையும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்றி ரெயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அவர்கள் இரவு 9.15 மணிக்கு திண்டுக்கல்லுக்கு பத்திரமாக வந்தனர்.
நவீன வசதிகள்: நவீன வசதிகள் இருப்பதால்தான், பயணிகள் வந்தே பாரத் ரயிலுக்கு அமோக வரவேற்பை தந்து வருகிறார்கள்.. ஆனாலும், இந்த நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் கதவு திடீரென திறக்கப்படாததால், சுமார் ஒன்றரை மணி நேரம் பயணிகள் திண்டுக்கல்லில் தவித்து போய்விட்டனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage