ராமநாதபுரத்தில் "பாஜக" போட்டியிட்டால்? அன்வர் ராஜா கொடுத்த நறுக் பதில்

post-img

அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான இவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான இவர் அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தார்.

அன்வர் ராஜா:

ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்த காலத்தில் அன்வர் ராஜா சசிகலா ஆதரவாளராக இருந்தவர். அதன் பிறகு சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறினார். இருப்பினும், சிஏஏ சட்டத்தில் அதிமுக அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், அன்வர் ராஜா அப்போது மாநிலங்களவையிலும் எதிர்த்துப் பேசினார். அதன் பின்னரே 2019 லோக்சபா தேர்தலில் அன்வர்ராஜா ஓரங்கட்டப்பட்டார்.அதேபோல பாஜக உடனான கூட்டணி குறித்தும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றும் கூறி வந்தார்.

இந்தச் சூழலில் தான் 2021 சட்டசபைத் தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கவில்லை. அப்போது ஒரு கூட்டத்தில், தற்போதைய அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது என்றும் அதை வலுப்படுத்தச் சின்னம்மா வர வேண்டும் என்று அவர் கூறியது சர்ச்சையானது. அவர் இப்படிப் பேசிய உடனேயே கட்சி விதிகளை மீறியதாகவும், கட்சியின் மாண்பிற்குக் களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி அன்வர் ராஜா கடந்த 2021 டிசம்பரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மீண்டும் அதிமுகவில் இணைந்தார்:

இதற்கிடையே அனவர் ராஜா இப்போது எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுக- பாஜக இன்னும் கூட்டணியில் தொடரும் நிலையில், பாஜக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்த அன்வர் ராஜா மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது இந்தியாவில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன என்றும் இதனால் அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் என்ன தவறு என்றும் அவர் தெரிவித்தார்.

என்ன காரணம்:

சிறிய சறுக்கல்களில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன் என்று கூறிய அவர் கட்சிக் கொள்கைகளுடன் இணைந்து தொடர்ந்து இணைந்து பயணிப்பேன் என்றும் ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பேன் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "தேர்தல் முடிவுக்குப் பிறகு தான் சிறுபான்மையினர் வாக்கு பாஜகவுக்குக் கிடைத்ததா என்பது தெரியும்.ஒரு தேர்தலில் எது பிரதானமானது என்பதை மக்கள் கருதுகிறார்களோ.. அதை வைத்தே அவர்கள் வாக்களிப்பார்கள்.

ராமநாதபுரம்:

ஒரு நேரத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பு கருதி ஒரு முடிவை எடுப்பார்கள். மற்றொரு சமயம் அதைக் காட்டிலும் மற்ற மோசமான பிரச்சினை இருந்தால் வேறு ஒரு கட்சிக்கு அவர்கள் வாக்களிப்பார்கள்.

எனவே, இதைத் தேர்தல் முடிந்த பிறகே நாம் சொல்ல முடியும் அரசியலில் விமர்சனங்கல் இருக்க தான் செய்யும். ஒருவரை ஒருவர் விமர்சிப்பது இருக்கவே செய்யும். விமர்சனம் என்பது வேறு கூட்டணி என்பது வேறு" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த தேர்தலிலேயே ராமநாதபுரம் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை பிரதமர் மோடியே கூட ராமநாதபுரத்தில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, "ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் அவர்களுக்காக வாக்களிப்பேன்" என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டார்.

Related Post