ஐயோ! சென்னையில் ஆலந்தூரில் மிக மோசம்.. ஒரு மணி நேரத்திற்குள் இவ்வளவு மழையா..

post-img

சென்னை: சென்னை ஆலந்தூரில் ஒரு மணி நேரத்திற்குள் 85 மி.மீ. மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழைக்காலம் தொடங்கியது முதல் பெரிய அளவுக்கு மழை இல்லாமல் இருந்து வந்தது. பெரும்பாலான சமயங்களில் வறண்ட வானிலையே நிலவியது.


தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தாலும் தலைநகர் சென்னையில் மழைக்கான வாய்ப்பு இல்லாமலேயே இருந்தது. இதனால் பருவமழை காலத்தில் இயல்பை விட 70 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது.


இந்த நிலையில் இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள் மற்றும் வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.


நேற்று காலை 8.30 மணி அளவில் தேனாம்பேட்டை,, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மணலி, அண்ணாநகர், ஆலந்தூர், புழல் உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. அதாவது 30 செ.மீ. மழையாகும். இதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் இருந்து மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. சென்னை கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்தது.


ஆலந்தூரில் கனமழை பெய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலை, ஆதம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிய வழியில்லாமல் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிப்படுகிறார்கள்.


சிலருடைய வாகனங்கள் மழை நீரில் சிக்குவதால் அவர்களால் வண்டியை இயக்க முடியாமல் சாலைகளில் தள்ளிக் கொண்டு செல்லும் நிலையும் இருக்கிறது.தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.


அதிகாலை வேளையில் இடி சப்தம் காதை பிளந்தது போல் இருந்தது. இந்த மழை இன்னும் 48 மணி நேரத்திற்கு தொடரும் என்கிறார்கள். இந்த நிலையில் ஆலந்தூரில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 85 மி.மீ. மழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஆலந்தூரில் பெய்த மழையில் இதுதான் மிகவும் மோசமான மழை என்றார்.


ஆலந்தூர்- சென்னை விமான நிலையம்- மடிப்பாக்கம் பகுதிகளில் கனமழை வெளுத்தது. இன்று காலை 8.30 மணி வரை சென்னையில் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post