சேலம் ரயிலில் யாரந்த பெண்? ரிசர்வேஷன் கோச்சில் தெலுங்கிலேயே பேசி.. டக்னு கற்பூரத்தை எடுத்து.. வீடியோ

post-img

சேலம்: சேலம் ரயிலில் நள்ளிரவில் நடந்த சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த மக்களுக்கும் பேரதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. ஐயப்ப பக்தர்கள் செய்த இந்த காரியம், வீடியோவாகவும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது ரயிலில்?
எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், சமையல் எரிவாயு உருளை, அமிலம், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது என்று ஏற்கனவே ரயில்வேயின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. ஆனாலும், சபரிமலை சீசன் துவங்கி உள்ள நிலையில், சிறப்பு ரயில்களில் பக்தர்கள் சிலர், விளக்கு மற்றும் கற்பூரம் ஏற்றி வழிபடுவதாக தெரியவந்தது.

சேலம் கோட்டம்: எனவேதான், கடந்த வாரம் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த செய்திக்குறிப்பில், "சபரிமலை செல்லும் பக்தர்கள் சிலர் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றி வைத்து பூஜை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, சபரிமலை பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
தீ விபத்துகள். ரயில் பயனாளிகள் மற்றும் ரயில்வே சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கற்பூரம் அல்லது வேறு ஏதேனும் திறந்த சுடர்/நெருப்பை ஏற்றுவது ரயிலிலும், ரயில் நிலைய வளாகத்திலும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களுடன் பயணிப்பது அல்லது வைத்திருப்பது கண்டறியப்பட்டால், ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 67, 164 மற்றும் 165 இன் கீழ் தண்டனை விதிக்கப்படும்.
3 ஆண்டுகள் சிறை: இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். யாரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், "130" என்னும் கட்டமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது பணியில் இருக்கும் எந்த ரயில்வே ஊழியர்களையும் அணுகலாம்" என்று கேட்டுக் கொண்டிருநத்து.

எனினும், சில ஐயப்ப பக்தர்கள் இந்த விதிமுறைகளை மதிக்கவில்லை.. இதனால், தற்போது வசமாக போலீசில் சிக்கியிருக்கிறார்கள்.. நேற்றிரவு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே சென்ற திருப்பதி-கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (17421) ரயிலானது, திருப்பதியில் நேற்று மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டது.
கொல்லம் ரயில்: பிறகு இந்த ரயில், சித்தூர், காட்பாடி வழியே சேலத்திற்கு நேற்றிரவு 8.04 மணிக்கு வந்து, ஈரோட்டிற்கு இரவு 9.09க்கும், திருப்பூருக்கு இரவு 10.08க்கும், கோவைக்கு இரவு 11.03க்கும் சென்று, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் வழியே கொல்லத்திற்கு இன்று காலை 6.13மணிக்கு சென்றடைந்தது.

இந்த ரயிலில், ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர பயணம் செய்துள்ளனர்.. இதில் இரண்டாம் வகுப்பு, ரிசர்வேஷன் பெட்டியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்திருக்கிறார்கள்.
இவர்கள் ரயில் ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஐயப்ப சுவாமி படத்தை எடுத்து, இருக்கையின் மேல் பகுதியில் வைத்து, மேல்பகுதியில் வைத்து, பஜனை பாடியுள்ளனர். பிறகு தாம்பூல தட்டில் கற்பூரம் ஏற்றி ஐயப்பனுக்கு காட்டி வழிபட்டுள்ளனர்..
அதிர்ந்த பயணிகள்: இதைப்பார்த்ததுமே சில சக பயணிகள் அதிர்ச்சியடைந்து, ஐயப்ப பக்தர்களிடம் தட்டிக்கேட்டுள்ளனர்... ஆனாலும், தெலுங்கில் பேசிக்கொண்டே, அந்த ஐயப்ப பக்தர்கள் கற்பூரத்தை ஏற்றி தொடர்ந்து வழிபாடு செய்திருக்கிறார்கள். கற்பூரம் ஏற்றியதுடன் மட்டுமல்லாமல், இந்த வழிபாட்டு நிகழ்வுகள் அத்தனையும், அந்த ரயிலில் பயணித்த சக பயணி, செல்போனில் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.
இந்த வீடியோவானது, இணையத்தில் வேகமாக பரவி பலருக்கும் அதிர்ச்சியை தந்துவிட்டது. இறுதியில் ஆர்பிஎப் போலீசாரின் பார்வைக்கும் வீடியோ சென்றதையடுத்து, தற்போது விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். ரயிலில் தடையை மீறி கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த ஐயப்ப பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தீவிர நடவடிக்கை: ரயில்களில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள், பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கற்பூரம் ஏற்றக்கூடாது என ரயில்வே நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும்கூட, இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. கற்பூரம் ஏற்றி வழிபட்ட ஐயப்ப பக்தர்கள், இப்போதைக்கு சபரிமலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் தரிசனம் முடித்து திரும்பியபிறகு உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.. எப்படியும் விதிமுறைகளை மீறியவர்களுக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.
ரயிலில் பக்தர்கள் இந்த வழிபாடு நடத்தும்போது, சாமி சரணம் பாடலை பாடிக் கொண்டேயிருந்திருக்கிறார்கள்.. இவர்களில் பெண் பக்தர் ஒருவரும் பஜனையில் ஈடுபட்டிருக்கிறார். அவர் யார் என்ற விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

Related Post